செவ்வாய், 28 நவம்பர், 2017

ஈவ்டீசிங் குறித்து புகார் அளித்ததால் தாக்குதலுக்கு உள்ளான இளம்பெண்கள்..! November 28, 2017

Image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஈவ்டீசிங் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த இளம் பெண்களை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வேதபுரத்தை சேர்ந்த சரண்யா மற்றும் பிரியதர்ஷிணி இருவரும், மன்னார்குடியில் உள்ள மளிகை கடை ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். தினந்தோறும் இவர்கள் மன்னார்குடிக்கு பேருந்தில் சென்று வரும்போது, களப்பால் பகுதியை சேர்ந்த 6 இளைஞர்கள், இருவரையும் கிண்டல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுகுறித்து, சரண்யா மற்றும் பிரியதர்ஷிணி இருவரும், களப்பால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் அவர்களின் புகாரை வாங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், பெண்கள் புகார் அளிக்கச் சென்றதை அறிந்த அந்த இளைஞர்கள், பேருந்தில் பயணித்த சரண்யா மற்றும் பிரியதர்ஷினியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் காயமடைந்த அவர்களை, சக பயணிகள் மீட்டு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினரின் அலட்சியம் காரணமாகவே, பெண்கள் இருவரும் தாக்கப்பட்டதாக பொதுமக்களும், பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்துக்குக் காரணமான களப்பால் பகுதியை சோந்த அஜீத், சத்தியசீலன், ஜெய், மாதவன், தமிழரசன் மற்றும் குனசேகரன் ஆகிய ஆறுபேரையும் கைது செய்ய வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.