மியான்மர் நாட்டில் ரோஹிங்கிய இனத்தைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மியான்மரில் வசித்துவரும் ரோஹிங்கியர்களை அந்நாட்டில் வசிக்கும் உரிமை இல்லை எனக்கூறி பல்வேறு ஆயுதக்குழுக்களால் அமைப்புக்களால் விரட்டியடிக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக நீடித்த இது போன்ற செயல்களால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அகதிகளாக வெளியேறினர். இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் ரோஹிங்கிய ஆயுதக்குழு ஒன்று பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து ராக்கைன் மற்றும் சுற்றுப் புறங்களில் ராணுவத்தினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இதனால் லட்சக்கணக்கான ரோஹிங்கியர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடும் நிலை ஏற்பட்டது. அண்டை நாடான வங்கதேசத்திற்கு அகதிகளாகச் சென்ற 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர், காக்ஸ் பஜாரில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ரோஹிங்கிய இனத்தின் இளம் பெண்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாலியல் குற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், சிறுமிகள் பாலியல் அடிமைகளாக விலைக்கு விற்கப்படுவதாகவும் தற்போது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.