கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே, வாகன சோதனையின் போது, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை போலீசார் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவட்டார் அடுத்த கல்லுபாலம் பகுதியில், காவல் உதவி ஆய்வாளர் தேவராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள், வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் தேவராஜ், வாகனத்தில் சென்ற இளைஞர்களை லத்தியால் தாக்கியுள்ளார்.
இதில் இருசக்கர வானத்தில் சென்ற ராஜேஷ் என்ற இளைஞரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், காவலர்களிடம் கேட்டபோது, போலீசார் தரக்குறைவாக பேசி பொதுமக்களை அடிக்க முயன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து காயமடைந்த இளைஞரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொதுமக்கள், போலீசாரின் சட்டையை பிடித்து இழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த சில மாதங்களாக, வாகன தணிக்கை என்ற பெயரில் போலீசார் தாக்குதலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், இதுகுறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.