புதன், 29 நவம்பர், 2017

வெடிக்கும் அபாயத்தில் உள்ள இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலை! November 29, 2017

Image

இந்தோனேசியாவின் பாலி தீவிலிருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர். 

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஆகங் எரிலை கடந்த இரு மாதங்களாக சீற்றத்தை வெளிப்படுத்தி பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருந்தது. இதனால் அந்த எரிமலையைச் சுற்றிலும் 8 முதல் 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற அரசு உத்தரவிட்டது.  இதனால் பலமுறை இரண்டாம் எண் எச்சரிக்கை விடப்பட்டது. இந்த எரிமலைக்கு அருகே உள்ள கிராமப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் ஏற்கனவே பாதுகாப்பு முகாம்களுக்குச் சென்றுவிட்டனர். 

இந்நிலையில், எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், 4ம் எண் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் தற்போது அபாயகரமான பகுதிகளில் வசித்துவருவதாக இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.இருப்பினும் ஏராளமான பொதுமக்கள் கால்நடைகள் மற்றும் பல்வேறு காரணங்களைக் காட்டி, இப்பகுதியை விட்டு வெளியேறத் தயக்கம் காட்டிவருகின்றனர். 

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள அனைவரையும் கட்டாயமாக வெளியேற்ற அரசு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். எரிமலை வெடிக்கும் அபாயம் காரணமாக பாலி தீவில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.