வியாழன், 30 நவம்பர், 2017

மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்! November 30, 2017

Image

திருவள்ளூர் அருகே பள்ளி மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூரில் உள்ள ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் மணிமேகலை. 

இவர் கடந்த 24ம் தேதி, ஒவ்வொரு வகுப்பு தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ள மாணவிகளை அழைத்து கழிப்பறையை சுத்தம் செய்ய சொல்லியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த மாணவிகள் அழுதபடியே கழிப்பறையை சுத்தம் செய்துள்ளனர். எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் கழிப்பறையை சுத்தம் செய்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள், இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருக்கவே பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பள்ளியில் நேற்று நேரில் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, தலைமை ஆசிரியை  மணிமேகலையை பள்ளிகல்வி இயக்குநர் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.