Breaking News
Loading...
ஞாயிறு, 26 நவம்பர், 2017

Info Post
Image
நீருக்கு அடுத்து காற்று, சீனாவுக்கு அடுத்து இந்தியா! இதுவரை இயற்கையில் இலவசமாகக் கிடைத்த சுத்தமான நீரோ, காற்றோ இனி அவ்வாறு கிடைக்காது. இனி தூய்மையாக எது வேண்டும் என்றாலும் அதை நாம் விலை கொடுத்து தான் வாங்க வேண்டும். ஏனெனில் நாம் வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருக்கிறோம். எது வளர்ச்சி? எதை இழந்து எதைப் பெறுகிறோம்? இயற்கை வளங்களைத் தொழிற்சாலைகளுக்கு தாரைவார்ப்பது தான் உண்மையான வளர்ச்சியா?டெல்லியில் மீண்டும் காற்று மாசுபாடு உச்சத்தை அடைந்துள்ளது. தற்பொழுது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும் தன்மை கொண்ட பிஎம் 2.5 (PM 2.5) நுண்துகள்கள் அதிகரித்திருக்கிறது. இத்துணுக்குகள் மிகச் சிறியது என்பதால் எளிதாக நுரையீரலில் நுழைந்து ஆஸ்துமா மற்றும் இதர சுவாச நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. வாகன பெருக்கம், குப்பை எரிப்பு போன்ற காரணங்களை அதிகாரிகள் அடுக்கினாலும் வரைமுறை இல்லாமல் வளரும் தொழிற்சாலைகளுக்கே மாசுபாட்டில் மிகப் பெரிய பங்கு உள்ளது. வளர்ந்த நாடுகளின் தேவைகளை உற்பத்தி செய்யும் உற்பத்திக்கூடங்களாக மூன்றாம் உலக நாடுகள் மாறிப்போனது தான் இவ்வகை மாசுபாட்டிற்கான காரணம்.


டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) நர்சர் கிறீன் (Nurture Green) நிறுவனத்துடன் இணைந்து ஹூடா (HUDA) சிட்டி சென்டர் மெட்ரோ நிலையத்தில் அமைத்ததுபோல், இலவச ஆக்ஸிஜன் அறைகளை (Oxygen chambers) இன்னும் 6 இடங்களில் அமைக்க முடிவெடுத்து உள்ளன. இந்த அறைகளில் காற்றை சுத்திகரிக்கும் செடிகள் மற்றும் ப்யூரிஃபையர்கள் பொருத்தப்பட்டிருக்கும். இத்திட்டம் பிடித்தவர்கள் வெறும் ரூ.20,000 மட்டும் செலுத்தி இவ்வாறு ஆக்ஸிஜன் அறைகளை தங்கள் வீட்டில் அமைத்துக்கொள்ளலாம். கனடாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று சீனாவில் முன்னர் விற்றதைப் போல் இந்தியாவிலும் தூய்மையான ஆக்ஸிஜனை விதவிதமான நறுமணங்களில் (flavors), 3 மற்றும் 4 லிட்டர் கேன்களில் தலா ரூ.1,450 மற்றும் ரூ.2,800-க்கு விற்கிறது. அதாவது ஒரு தூய்மையான ஸ்வாசத்திற்கான விலை ரூ.13 என்று நிர்ணையிக்கப்பட்டிருக்கிறது.ஸ்தம்பித்த தலைநகரம்டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 34 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மற்றும் 73 ரயில்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.


ஐ.ஐ.டி கான்பூரின் ஆய்வின்படி, மின் நிலையங்களும் தொழிற்சாலைகளும் தான் சுற்றுச்சூழல் மாசுபாட்டை அதிக அளவில் ஏற்படுத்துகின்றன. வெளியிடப்படும் SO2 வாயுவில் 98 சதவிகிதம், (அதாவது கிட்டத்தட்ட 142 டன் ) மற்றும் 312 டன் NOx-இல் 60 சதவிகிதம் டெல்லியின் காற்றில் தினமும் கலக்கப்படுகிறது. டெல்லியின் மின்நிலையங்கள் ராஜ்காட் (Rajghat) மற்றும் படர்பூரில் (Badarpur) அமைந்துள்ளது. அங்கே உள்ள 20-க்கும் மேற்பட்ட பெரும் தொழிற்சாலைகள் 90% SO2 மற்றும் NOx-ஐ வெளியிடுவதாக ஐ.ஐ.டி கான்பூரின் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.


மாசுபாட்டை தடுக்க என்னதான் தீர்வு?


ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் வாகன ஓட்டத் திட்டத்தை மூன்றாவது முறையாகப் பரிசீலிப்பது, விவசாய கழிவுகளை எரிக்கத் தடை விதிப்பது அனைத்தும் தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்க முடியும். கூடிய அளவு பொதுபோக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்ற போதிலும், இதுவே நிரந்தர தீர்வு அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உலக சுகாதார அமைப்பின் மிகவும் மாசு அடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 9-வது இடம் பிடித்து உள்ளது. தமிழ்நாட்டின் மிகவும் மாசடைந்த நகரமாகச் சென்னை விளங்குகிறது. குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகளை விரைந்து அகற்றி, கழிவுகள் சரியாக அகற்றப்படுகிறதா என்று ஆய்வுகள் மேற்கொண்டு சீரமைக்கவேண்டும். துரிதமாகச் செயல்படாவிட்டால் விரைவில் இந்தியா மிகவும் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துவிடும்.