ஒரு சேவைக்கோ பொருளுக்கோ நாம் பணம் தரத்தேவையில்லை என்றால், அங்கே நாம் வேறு ஏதோ ஒன்றை இழக்கிறோம் என்று பொருள். இணையத்தில் அந்த ஏதோ ஒன்று என்பது நம் ப்ரைவஸி. ஃபேஸ்புக், கூகுள் தொடங்கி அனைத்து டெக் நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளரைப் பற்றி அறிந்துகொள்வதில்தான் மும்முரமாக இருக்கின்றன.
இணையச் சந்தையில் இருக்கும் 90% நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலமாகவே தங்கள் லாபத்தைப் பார்க்கின்றன. அந்த விளம்பரங்கள் சரியான நபருக்குச் சென்று சேர்கிறதா என்பதுதான் அவர்களது Efficiency. அதனால் Targeted audience-ஐ நோக்கி அவர்கள் நகர்ந்தார்கள். ஒரு கிரிக்கெட் போட்டியில் காரின் விளம்பரம் வருகிறது என்றால், காரை வாங்கவே முடியாத கோடிக்கணக்கான பேரும் அந்த விளம்பரத்தைப் பார்ப்பார்கள். அதற்கும் சேர்த்துதான் தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் செய்பவர்கள் பணம் தர வேண்டும். ஆனால், இணையத்தில் அப்படியில்லை. யாருக்கு கார் தேவை, யார் இப்போது கார் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு மட்டும் கார் விளம்பரத்தைக் காட்ட முடியும். அதனால், Turn around அதிகமாக இருக்கும். அதாவது விளம்பரங்கள் பார்க்கும் 100 பேரில் கணிசமான ஆட்களையாவது கார் வாங்க வைத்து விட முடியும்.
சரி, இது எப்படி சாத்தியம்?
இணையத்தில் நமது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன. கண்காணிப்பு என்றால் நீங்கள் நினைப்பதை விட பல மடங்கு அதிகமாக. நாம் கூகுளில் ஒரு பொருளைத் தேடினால் அந்தப் பொருளின் விளம்பரம் நாம் போகுமிடமெல்லாம் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும். இது இன்னும் இன்னும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நமது மெயில், ட்விட்டர், மெஸெஞ்சிங் சர்வீஸ் என எல்லோருமே நம்மை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். “நாளை நான் கோவை வரேண்டா” என நீங்கள் யாரிடமாவது சொல்லிவிட்டால் போதும். மோப்பம் பிடித்து கோவை ஹோட்டல்களிலிருந்து கோவை கால் டாக்ஸி வரை உங்கள் மொபைலுக்குள் எப்படியாவது வந்துவிடுவார்கள்.
இதற்கு பல உத்திகளை இணைய நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அது தொடர்பான சிக்கலில்தான் சமீபத்தில் ஃபேஸ்புக் சிக்கியது. ஃபேஸ்புக் மொபைல் ஆப் நாம் பேசும் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கிறது என ஒரு பிராது அதன்மீது தரப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் ஒரு யூ டியூப் வீடியோ வைரல் ஆனது. அந்த வீடியோவில் இருப்பதன் சாரம்சம் இதுதான்:
ஃபேஸ்புக் ஆப்-ஐ மொபைலில் நாம் இன்ஸ்டால் செய்யும்போதே, அது மைக்ரோஃபோனை ஆக்சஸ் செய்ய அனுமதி கேட்கும். அதற்கு நாம் கண்ணை மூடிக்கொண்டு ஓகே தான் கொடுப்போம். அதன்பின், அந்த ஆப் எப்போதுமே பேக்கிரவுண்டில் இயங்கிக்கொண்டிருக்கும். மைக்ரோஃபோன் எப்போதும் அலெர்ட்டாக இருக்கும். நாம் பேசும் வார்த்தைகளை கவனித்துக்கொண்டிருக்கும். அதிலிருந்து அதற்கு தெரிந்த கீ வேர்டுகளைப் பிரிக்கக் காத்திருக்கும். இந்த வீடியோவில் அதுபோல சில வார்த்தைகளை அவர் பேசுகிறார். சில மணி நேரத்தில், அவர் பேசிய ‘கேட் ஃபுட்’ தொடர்பான விளம்பரங்கள் அவரது ஃபேஸ்புக் டைம்லைனில் வருகின்றன. ’கேட் ஃபுட்’ பற்றி தான் வேறு எங்கும் பேசவில்லை, தேடவில்லை என்கிறார் அவர். அதனால், ஃபேஸ்புக் நாம் பேசும் அனைத்தையும் ஒட்டுக்கேட்கிறது என்பது அவரது குற்றச்சாட்டு.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தார்கள் என்பதே உண்மை. நமக்கு ப்ரைவஸி இனி இல்லவே இல்லையா என வருத்தப்படுகிறார்கள். ஆனால், ஃபேஸ்புக் தரப்போ “அப்படியெல்லாம் நாங்கள் ஒட்டுக்கேட்டதேயில்லை. Targeted ads என்பது உண்மைதான். அதற்காக இப்படியெல்லாம் செய்ய மாட்டோம்” என்கிறது.
source: Vikatan.com