ன்னையின் வெள்ளநிவாரணப் பணிகளில் வேகம் பிடித்திருக்கிறது. கடைநிலை ஊழியர்களோடு அதிகாரிகளும் சேற்றில் இறங்கி மீட்புப் பணியைத் துரிதப் படுத்தி வருகின்றனர். இடைவிடாது பெய்து வருகிறது, மழை. தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்றினாலே, சாலைப் போக்குவரத்து சிரமம் இல்லாமல் இருக்கும் என்பதால், அந்தப் பணியில் அதிகாரிகள் தீவிரமாக இருக்கின்றனர். சென்னையின் பிரதானச் சாலைகள் அடங்கிய கோயம்பேடு, எக்ஸ்பிரஸ் அவென்யூ மற்றும் ஜி.என். செட்டி சாலைப்பகுதி போன்ற இடங்கள் எப்போதும் போன்றே இந்த முறையும் வெள்ளத்தில் சிக்கின. கோயம்பேடு வணிகவளாகமும், பேருந்து நிறுத்தமும் பள்ளமான பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில், பெருமழையின் தாக்கத்தால், அந்தப் பள்ளங்கள் முழுமையாக வெள்ளத்தால் மூடிக்கொண்டது. வருவாய்த்துறை, மாநகராட்சி, மாநகரக் காவல்துறை, தீயணைப்பு உள்ளிட்ட துறைசார்ந்த ஊழியர்களும் அதிகாரிகளும் இந்தப் பகுதியில் இரவு பகலாக நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளதால், தற்போது அந்தப் பகுதிகளில் நீர் வடிந்துவிட்டது. ஜி.என்.செட்டி சாலையும், இந்த முறை அதிக பாதிப்பில் சிக்கிக்கொண்டது. இந்தப் பகுதியிலும் அனைத்துத் துறை ஊழியர்களும் தீவிரமாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டதால், வெள்ள நீர் வடிந்துவிட்டது. எக்ஸ்பிரஸ் அவென்யூ பகுதியில் தேங்கிக் கிடந்த வெள்ளநீர்தான் சென்னையிலேயே மிக விரைவாக சீரமைக்கப்பட்ட பகுதியாகும். இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருப்பது, அவ்வை சண்முகம் சாலை, அடுத்து அமைந்துள்ளது அஜந்தா, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை போன்ற பகுதிகள்... ஆனால், இங்கே வெள்ளம் உடனடியாக வடியவில்லை. இங்கிருந்து நீரை வெளியேற்ற முடியாமல், ஊழியர்கள் திணறுகின்றனர். "மிகவும் பள்ளமான பகுதியாக இவை அமைந்திருப்பதால், நிவாரணப் பணிகளில் சற்று தொய்வு நிலை இருக்கிறது" என்கின்றனர் மீட்புப் பணியினர்.
சென்னைக் கீழ்ப்பாக்கம் கெங்குரெட்டி சுரங்கப்பாதையில், மழைநீர் தேங்கிக் கிடக்கும் தகவல்கிடைத்ததும், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் நேரில் வந்து பணிகளைத் துரிதப்படுத்தினார். அவரிடம் பேசினோம். "தொடர் மழை குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை. சென்னையின் 15 மண்டலங்களிலும் மீட்புப் பணிகள் வேகமாக நடக்கின்றன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்கிக்கொள்ள நிவாரண முகாம்கள் தயாராக இருக்கின்றன. கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்டதுபோல், இப்போது எதுவும் ஏற்படாது. மழை நின்ற 3 மணி நேரத்தில் இயல்புநிலை திரும்பிவிடும். அந்தளவுக்குப் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. சென்னையைப் பொறுத்தவரை, ஆர்.கே.நகர், துறைமுகம், கோட்டூர்புரம், அடையாறு, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். சென்னையில் இருக்கும் 16 சுரங்கப்பாதைகளில், கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் கெங்குரெட்டி சுரங்கப்பாதையில் மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது. இந்தத் தண்ணீரும், சேர சேர 45 நிமிடங்களில் வெளியேற்றப் பட்டுவிடும். தொடர் மழை பெய்வதால்தான் இப்படித் தண்ணீர் தேங்கிவிடுகிறது. அதையும், அவ்வப்போது வெளியேற்றி விடுகிறோம்" என்றார். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், எழும்பூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து நம்மிடம் பேசிய கமிஷனர், "மழைக்கால முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்துக்கு முன்னரே, சென்னையில் உள்ள போலீஸ் துணைக் கமிஷனர்களை அழைத்து மீட்டிங் போட்டோம். தீவிர மழையின்போது எப்படி பணிகளை மேற்கொள்வது என்பது குறித்தத் திட்டங்கள் அந்தக் கூட்டத்தில் வகுக்கப்பட்டன. மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் என அனைவரையும் ஒருங்கிணைத்துதான், மீட்புப் பணி நடந்து வருகிறது. சென்னை பெருநகரம் இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது" என்றார்.
சென்னை ரித்தர்ட்டன் சாலையில், மழைநீர் வடிவதில் தடை ஏற்பட்டது. உடனடியாக, வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரகுமார், நீர்ப்பாதையில் அடைத்துக்கொண்டிருந்த கழிவுகளைத் தனது கைகளாலேயே அள்ளி, வெளியே போட்டார். அடுத்தடுத்து பல பகுதிகளில் இவர், சீருடையுடன் இப்படிக் களத்தில் இறங்கியதைப் பார்த்த பொதுமக்கள், அவரைப் பெரிதும் பாராட்டினர். பொதுமக்களில் சிலர் இதன் பின்னர் அவரோடு களப்பணியில் இணைந்து, குப்பைகளை அள்ளி, தண்ணீர் போக வழிவகை செய்தனர். இன்ஸ்பெக்டர் வீரகுமாரின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது, பாராட்டுகளும் குவிகின்றன. "அடுத்த இருபதாவது நாள், பணி ஓய்வுபெறுகிறேன். எல்லோரும் என்னை விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்கச் சொல்கிறார்கள். ஆனால், மனது கேட்கவில்லையே" என்று ஆதங்கப்படுகிறார், குணசேகரன். சென்னை மாநகராட்சியில் இவருக்கு உதவியாளர் பணி. கடந்த வாரம் வரையில் இவர் நிலவேம்புக் கஷாயத்தை வீடு, வீடாகப் போய்ப் பலருக்கும் வழங்கியவர். இப்போது வெள்ள நிவாரணப் பணியில் மற்ற ஊழியர்களோடு இணைந்து களத்தில் இருக்கிறார். மக்கள் பணியில் இப்படிப் பலர் இருப்பதால்தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடிகிறது. நிவாரணப் பணிகளில் இருந்த வருவாய்த் துறை மந்திரி, ஆர்.பி. உதயகுமார், "சென்னையில் உள்ள வெள்ள பாதிப்பு குறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் மிகவும் தவறாகப் பரப்பி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்தில் வருகிற செய்திகளையும், அரசின் சார்பில் வெளியிடப்படும் தகவல்களையும் மட்டுமே பொதுமக்கள் கருத்தில்கொள்ள வேண்டும். பணிகளில் குறை காணக் கூடாது. இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சொல்கிற ஆலோசனைகளை வரவேற்கிறோம். எந்த மந்திரியும், வீடுகளுக்குப் போகவில்லை, அதிகாரிகளும் வீடுகளுக்குப் போகவில்லை. மக்கள் பணியில் வீதியில்தான் கிடக்கிறோம். அதைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையின் 15 மண்டலங்களுக்கும் மந்திரிகளைத் தனித்தனியாக நியமித்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். சென்னையில் ஒவ்வொரு மந்திரியும், தெருக்களில் சாதாரணமாக நடந்து போய், மக்களுக்கு ஆறுதல் கூறுவதையும் பார்க்க முடிகிறது. மாநகராட்சி கூடத்தில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மந்திரி ஜெயகுமார், மீன்பாடி சைக்கிள் ரிக்ஷாவில் வைத்துத் தள்ளிக்கொண்டே போய் மக்களுக்கு வழங்கியதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நவம்பர் 3 ஆம் தேதி பகல், சென்னைப் புறநகர்ப் பகுதிகளுக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு ஆறுதல் கூறினார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் தரம், மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தின் வசதி குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பொதுமக்களிடமும் பேசி, உண்மை நிலையை அறிந்துகொண்டார். பின்னர், சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதியில் வெள்ளப் பாதிப்பில் சிக்கிய தாழ்வான பகுதிகளுக்கும் நேரில் சென்றார். அங்கும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். முதல்வர், புறநகர்ப் பகுதியில் இருந்த அதேவேளையில், பல மந்திரிகள், சென்னையின் பல்வேறு பகுதிகளில், மக்களோடு இருந்ததைக் காணமுடிந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லப்போன மந்திரிகளை, பல இடங்களில் பொதுமக்கள் முறைத்துக்கொண்டு நின்றனர். ஆனால், மந்திரிகள், பொதுமக்களிடம் எதிர்வினையே ஆற்றவில்லை. மந்திரிகளே அமைதி காத்ததால், அதிகாரிகளும் அமைதி காத்தனர். மந்திரிகள் டி.ஜெயகுமார், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் போன்றவர்கள் நிவாரணப் பணிகளின்போது, மக்களிடம் பேசிய விதம் டாப் ரகம். "இருங்க, இருங்க. உங்களின் பிரச்னை எல்லாம் தீர்ந்துவிடும். எல்லாம் கொஞ்ச நேரம்தான். மொத்தத் தண்ணீரும் வெளியே போய்விடும். தண்ணீரை வெளியேற்ற நல்ல மிஷின் இருக்கிறது. இப்படித் தொடர்ந்து மழை பெய்தால் வெளியில் போகாதீர்கள். பள்ளம், மேடு தெரியாது. தவறி விழுந்துவிடுவீர்கள். தற்போதுள்ள சூழ்நிலைக்கு முகாம்களில் தங்கிக்கொள்ளுங்கள். இருக்கும் இடத்துக்கு உணவும், குடிநீரும் வந்துவிடும். மழையின் வேகம் குறைந்ததும், அவரவர் வீட்டுக்குப் போகலாம். வீடு எங்கேயும் போய்விடாது. போலீஸார் 24 மணிநேரமும் பாதுகாப்புக்கு இருக்கிறார்கள்" என்று மிகவும் நீளமான அறிவுரைகளை அளித்தனர் அமைச்சர் பெருமக்கள். ஆர்.கே.நகர்த் தொகுதியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு உணவு வழங்கியபோது, மந்திரி ஜெயக்குமாரும் மதுசூதனனும் அருகருகில் இருந்தனர். தொகுதியில் எதிரும் புதிருமான இவர்கள், வெள்ள நிவாரணப் பணிக்காகக் களத்தில் ஒன்றாக இருந்தது வியப்புதான். பொதுமக்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு கோட்டைக்குத் திரும்பிய முதல்வர், "போர்க்கால அடிப்படையில் மழை பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன. சென்னையில், அதிகளவு மழை பெய்தும்கூட தண்ணீர் தேங்கிவிடாதபடி உடனடியாக நீரை அகற்றும் பணியில் அரசு செயல்பட்டுவருகிறது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஏரிகளில் தூர் வாரியதால், கூடுதலாக 30 விழுக்காடு மழை நீர் சேமிக்கப்பட்டுள்ளது" என்று பேட்டியில் குறிப்பிட்டார்.
மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், வருவாய்த் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். "எங்கோ ஓரிரு இடத்தில் தவறுகள் நடக்கக்கூடும். அதை உயரதிகாரிகளிடம் சுட்டிக் காட்டினால், சரி செய்து விடலாம். அதை விட்டு விட்டு ஒட்டுமொத்த மாநகராட்சியும், போலீஸும், வருவாய்த்துறையும் வேலையே செய்யவில்லை என்று 'மீம்ஸ்' போடுவதால் யாருக்கு என்ன லாபம்? இப்படிப் பதிவுகள் போடுவதால், பணியில் இருக்கிற 99 விழுக்காடு ஊழியர்கள் மனவேதனைக்கு ஆளாகிறோம். அதிகாரிகளே சாலையில் இறங்கி, மண்ணையும், சேற்றையும் அள்ளிப் போடுவதை அதே மீம்ஸ்களில் போடலாமே... அதை ஏன் செய்ய மறுக்கிறார்கள்? புறநகர்ப் பகுதிகளில் வெள்ளம் இன்னும் வடியவில்லை என்பது உண்மைதான். அங்கும் நாங்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோமே... இது ஏன் தெரியாமல் போனது? ஊடகத்தில் எந்தப் பகுதிகளில் பிரச்னை என்று சுட்டிக் காட்டுகிறார்கள். உடனே அந்தப் பகுதிக்குக் கூடுதலாக ஆட்கள் அனுப்பிவைக்கப்பட்டு வேலை வேகமாக்கப்படுகிறது. 'எங்களுக்குக் குடிநீர் இல்லை, சாப்பிட உணவு இல்லை' என்று நாங்கள் எந்த இடத்திலாவது கேட்டதுபோல், ஒரு வீடியோவை வெளியிட முடியுமா? எங்களில் பலருக்கு நேரத்துக்கு உணவே இல்லை. திட்டும் வரை திட்டட்டும், மழைவெள்ளம் வடிந்த பிறகு அவர்களே திட்டுவதை நிறுத்திக்கொள்வார்கள்" என்றனர் வேதனையுடன். எப்போதும் இன்னொரு பக்கம் இருப்பதையும் உணர்வதே அனைவருக்கும் நல்லது!
source: vikatan.com