வெள்ளி, 10 நவம்பர், 2017

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த லாரி போக்குவரத்துக்குத் தடை! November 10, 2017

Image

டெல்லியில் காற்று மாசடைவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாகச் சரக்கு லாரிப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 12ஆம் தேதி நள்ளிரவு வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும். 

பிற மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் சாலைகள் அனைத்திலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுப் போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்துக் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அங்கு வரும் லாரிகளைத் திருப்பி அனுப்பி வருகின்றனர். 

அதேநேரத்தில் உணவுப் பொருட்கள், பால், பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் லாரிகள் மட்டும் டெல்லிக்குள் அனுமதிக்கப்படுகின்றன. சரக்கு லாரிப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் டெல்லியில் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் டெல்லியில் கட்டுமானப்பணிகள் எதுவும் நடைபெறக்கூடாது எனவும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியிலும், உத்தரப்பிரதேசத்திலும் சூழ்ந்துள்ள புகைமூட்டத்தால் நெடுந்தொலைவு செல்லும் ரயில்கள் பலமணி நேரம் தாமதமாகச் செல்கின்றன. டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இயற்கையாக உள்ள பனிமூட்டத்துடன், வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையும் சேர்ந்துள்ளதால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ரயில்களும் மிகக் குறைந்த வேகத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன. வெளியூர் ரயில்களின் வேகமும் குறைக்கப்பட்டுள்ளது. 

இதனால் ரயில்கள் பலமணி நேரம் தாமதமாக வருகின்றன.  இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பல்வேறு விரைவு ரயில்களில் செல்ல வேண்டிய பயணிகள் பலமணி நேரம் காத்திருந்தனர். 3 மணி நேரத்துக்கும் அதிகமாக ரயில் தாமதமானதால் பொறுமையிழந்த பயணிகள் பயணச்சீட்டைத் திரும்ப ஒப்படைத்துவிட்டுப் பணத்தைத் திரும்பத் தருமாறு ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

Related Posts: