சனி, 9 டிசம்பர், 2017

ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றம்! December 9, 2017

Image

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரவீன் நாயர் என்பவரை நியமிக்கப்பட்டுள்ளார். 

வரும் 21ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தேர்தல் அதிகாரியாக வேலுச்சாமி நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், வேட்பு மனுத்தாக்கலின் போது நடிகர் விஷால் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தக்கோரி நடிகர் விஷால் புகார் மனு அளித்திருந்தார்.   மேலும் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இதற்கிடையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை எனவும், ஆர்.கே. நகர் தொகுதிக்குள் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் இருப்பதாகவும் கூறி பாஜக வேட்பாளர் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.  

இதனையடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியை மாற்றக்கோரி திமுக, பாஜக  உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. இதனையடுத்து, புதிய தேர்தல் நடத்தும் அதிகாரியாக பிரவீன் நாயரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  பிரவீன் நாயர், தற்போது மகளிர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக பதவி வகித்து வருகிறார். தற்போது தென்கொரியா பயணம் மேற்கொண்டுள்ள அவர் அங்கிருந்து இன்று மாலை சென்னை திரும்புகிறார். தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறையாக நடைபெற வேண்டும் என வலியுறுத்தினார். 

கடந்த முறை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடந்த போதும் பல்வேறு புகாரால் தேர்தல் அதிகாரி திடீரென மாற்றப்பட்டார். அப்போது தேர்தல் அதிகாரியாக இருந்த பத்மஜா தேவிக்கு பதிலாக பிரவீன் நாயரே  அறிவிக்கபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.