
கல்லூரியின் சேர்க்கை படிவத்தில் மதம் என்ற பத்தியில் ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற மதங்களின் வரிசையில் மனிதநேயத்தை விருப்பத் தேர்வாக கொடுத்துள்ள கல்லூரி நிர்வாகத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மேற்குவங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ளது Bethune கல்லூரி. கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரியான Bethune கல்லூரி, 1879ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவிலும் ஆசிய அளவிலும் மகளிருக்காக தொடங்கப்பட்ட முதல் கல்லூரி என்பது சிறப்புக்குரியது.
இந்நிலையில் இக்கல்லூரியின் இணையதளத்தில் உள்ள மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தில் மதம் என்ற பத்தியில் இதர மதங்களுடன் மனிதநேயத்தையும் விருப்பத் தேர்வாக கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இக்கல்லூரியின் முதல்வர் மமதா ராய் சவுத்ரி கூறுகையில், ஒரு சில மாணாக்கர்கள் தாங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரியப்படுத்துவதில் விருப்பமில்லாமல் இருப்பதை பார்த்தோம், இதற்காக பிரத்யேக பிரிவு ஒன்றை உருவாக்க எண்ணினோம், அப்போது இளம் வயதிலேயே மத நம்பிக்கை இல்லை என்பதற்கு பதிலாக மனிதநேயம் என்று குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என எண்ணியே மனிதநேயத்தை மத தேர்வில் சேர்த்தோம் என குறிப்பிட்டார்.
கல்லூரி நிர்வாகத்தின் இம்முடிவினை மாணவர்களும், முன்னாள் மாணவர்களும், பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்.