சனி, 1 ஜூன், 2019

உலக அளவில் ட்ரெண்டாகும் #StopHindiImposition ஹேஷ்டேக்...! June 01, 2019

Image
மும்மொழிக்கொள்கைக்கு எதிரான #StopHindiImposition மற்றும் #TNAgainstHindiImposition ஹேஷ்டேக், ட்விட்டரில் உலக அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. 
புதிய கல்விக் கொள்கைக்கான வரைவை, புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் ஒப்படைத்தனர். அதில், தேசிய கல்வி ஆணையம் உருவாக்குவது, மும்மொழிக்கொள்கையை உருவாக்குவது மற்றும் தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை தடுப்பது போன்ற பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மும்மொழி கொள்கையை, நாடு முழுவதும் நடுநிலை வகுப்பு முதல் அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில், இந்தி கட்டாயம் அல்லாத மாநிலங்களில், இனி இந்தி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஊடகங்களில் இதுகுறித்து செய்தி வெளியானதை அடுத்து, திமுக எம்.பி.கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் இந்தி திணிப்பிற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து,  #StopHindiImposition மற்றும் #TNAgainstHindiImposition ஹேஷ்டேக் ட்விட்டரில், உலக அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
உலக ட்ரெண்டிங்
இந்நிலையில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 2 நாட்களுக்கு முன்னர் நேசமணி குறித்த ஹேஷ்டேக் ட்விட்டரின் உலக ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது. தற்போது #TNAgainstHindiImposition என்ற ஹேஷ்டேக் உலக ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. தமிழகம் சார்ந்த ஹேஷ்டேக், இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக உலக ட்ரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கிறது என்பது கூடுதல் தகவல்.