அரசு 30 5 2019 பதவியேற்ற நிலையில், அமைச்சரவையின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 17ஆம் தேதி தொடங்கும் என்றும், ஜூலை 5ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், மாணவர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 500 ஆக உயர்ந்தது. அதேபோல் மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை 2 ஆயிரத்து 250- ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் இந்த கல்வி உதவித் தொகைக்கான உத்தரவில் பிரதமர் மோடி முதல் கையெழுத்திட்டார்.
தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான,5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் 5 கோடி பேர் பயன் அடைவார்கள் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
மேலும், 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடரை, வரும் 17-ந் தேதி தொடங்குவது என்றும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத் தொடர், ஜூலை 26-ந் தேதி வரை நடைபெறும் என்றும், ஜூலை 5-ம் தேதி பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.