ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு அதிகாரியை தாக்கிய, பா.ஜ.பிரமுகரை, போலீசார் கைது செய்தனர். ஜார்க்கண்டில் முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில் பா.ஜ. ஆட்சி நடைபெறுகிறது. லதேகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும், திட்ட அமலாக்கக் குழுவின் துணைத் தலைவராக ஆளுங்கட்சியைச் சேர்ந்த ராஜ்தானி யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். காரை அலுவலகத்தின் வாயிலில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். யாதவ் காரின் முன்பகுதியில் அவரது பெயர் மற்றும் பதவியுடன் கூடிய பெயர் பலகை பொருத்தப்பட்டிருந்தது. இது போக்குவரத்து விதிகளுக்கு எதிரானது.
கலெக்டர் அலுவலகத்துக்கு வேலை விஷயமாக வந்த மாவட்ட போக்குவரத்து அதிகாரி பர்லா பாஜ பிரமுகர் யாதவின் காரில் இருந்த முகப்பு பலகையை அகற்றினார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த, ராஜ்தானி, தன் காரில் இருந்த பெயர் பலகை அகற்றப்பட்டதை பார்த்து, ஆத்திரமடைந்தார். பலகையை அகற்றியது மாவட்ட போக்குவரத்து அதிகாரி பர்லா என்பது தெரிந்ததும் அவரை தேடிபோய் சரமாரியாக தாக்கினார். இது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, போக்குவரத்து அதிகாரியை தாக்கிய, ராஜ்தானியை, போலீசார் கைது செய்தனர்.
source: dinakaran