உலகம் முழுக்கவும் பிட்காய்ன்ஸ் எனப்படும் இணையச்செலவாணி நிதி ஆதார முறை தற்போது பரவி வருகிறது.
பிட்காய்ன்ஸ் முறையில், ஒரு பிட்காய்ன் என்பதற்கு நடப்பில் உள்ள பணமதிப்பு முறையில் ஒரு குறிப்பிட்டத் தொகை நிர்ணயிக்கப்படும். தோராயமாக சில ஆயிரங்கள் அல்லது லட்சங்கள் மதிப்பில் இந்த பிட்காயின்களின் மதிப்பு இருக்கும். நாம் குறிப்பிட்ட ஒரு தொகையை இன்னொருவருக்கு கொடுப்பதற்கு பதிலாக பிட்காய்ன்களாக கொடுத்துவிடலாம். இத்தகைய நடைமுறையால் பணச்செலவாணி முறையில் மிகப்பெரும் மாற்றங்கள் வரும். அதேநேரம், ஊழல் பெருகவும் வாய்ப்பிருக்கிறது.
இந்தியாவில் இத்தகைய பிட்காய்ன்ஸ்கள் எதையும் பயன்படுத்தக்கூடாது என்றும், அவற்றில் முதலீடு செய்வது சட்டவிரோதம் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், மாறிவரும் உலக வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பயன்பாடுகளுக்கு ஏற்ப இணையச்செலவாணி முறையை அதிகப்படுத்துவதை பல பெருநிறுவனங்கள் போட்டி போட்டு செய்து வருகின்றன.
இன்னொருபுறம், பெருநிறுவனங்கள் பிட்காய்ன்களுக்கு இணையாக மாற்று இணையச்செலவாணிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. கொடாக், பர்கர் கிங், டெலிகிராம், பேங்க் ஆப் இங்கிலாந்து போன்ற நிறுவனங்கள் தற்போது இந்த பணியில் ஈடுபட்டுள்ளன.
இதேபோல், ரஷ்யா, சிங்கப்பூர், வெனிசுலா, தென்கொரியா மற்றும் சுவீடன் போன்ற நாடுகளின் அரசுகளும் அதிகாரப்பூர்வமான இணையச்செலவாணிகளை உருவாக்க திட்டமிட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் தற்போது தனக்கான தனித்த இணையச்செலவாணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி தலைமையில், 25 வயது மதிக்கத்தக்க சுமார் 50 இளம் தொழில் அதிபர்களுடன் சேர்ந்து இத்தகைய திட்டம் தொடங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.