வாட்ஸ்-அப் க்ரூப் சாட்களை ஹேக் செய்ய முடியும் என்று ஜெர்மனைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ‘Real World Crypto security’ என்கிற இணைய ஆய்வுகள் குறித்த மாநாட்டில் இந்த ஆய்வை முன் வைத்துள்ளனர்.
ருகர் பல்கலைக்கழக ஆய்வாளர்களில் ஒருவரான பௌல் ரோஸ்லர் இதைத் தெரிவித்துள்ளார். வாட்ஸ் அப்- உடைய சர்வரை ஹேக் செய்வதன் மூலம், வாட்ஸ் அப் குழுக்களுக்குள் நுழைந்து, வெளியிலிருந்து ஒருவரை அந்த குழுவுக்குள் இணைக்க முடியும்.
இப்படி இணைப்பதால், அந்த குழுவில் உள்ள அனைத்து நபர்களின் வாட்ஸ் அப் எண்களோடும் ஹேக்கர்களுக்கு ‘End to end encryption' எனப்படும் தனிப்பட்ட உரையாடல் பாதுகாப்புத் தன்மையைப் பெற்றுவிட முடியும். இதைப்பயன்படுத்தி, ஹேக்கர்கள் வாட்ஸ் அப் உரையாடல்களின் இருந்து அந்தரங்கத் தகவல்கள் உள்ளிட்ட அனைத்தையும் திருடலாம் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வாட்ஸ்-அப் சர்வரை ஹேக் செய்வதற்கு மிகச்சிறந்த தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஹேக்கர் குழுவால் மட்டுமே முடியும் என்றும் அந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஆய்வு முடிவுகளை வாட்ஸ் அப் செயலியின் தாய் அமைப்பான முகநூல் நிறுவனம் மறுத்துள்ளது.