திங்கள், 5 ஆகஸ்ட், 2019

அமெரிக்காவின் இரு வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு - 30 பேர் உயிரிழப்பு! August 04, 2019

Image
அமெரிக்காவில் இரு வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வால்மார்ட் நிறுவனம் ஒன்றில் ஏராளமான பொதுமக்கள் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தணமாக பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளார். கைத்துப்பாக்கிக்கு பதில் அவர் ரைபிள் துப்பாக்கியால் சுட்டதால் பொதுமக்கள் பலரின் உடல்களிலும் ஏராளமான குண்டுகள் பாய்ந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இந்த கொடூர தாக்குதலை நடத்திய நபரை கைது செய்தனர். 
மேலும், குண்டுகளால் துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த பலரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
Texas Shooting
டெக்சாஸின் வால்மார்ட் நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய 21 வயது இளைஞரை கைது செய்துள்ள போலீசார், சந்தேகத்தின் பேரில் மேலும் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதால், வெறுப்பில் இருந்த இளைஞர் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எனினும் இதுபற்றி காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இது ஒரு கோழைத்தனமான தாக்குதல் என விமர்சித்துள்ளார். அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என தெரிவித்துள்ள அவர், தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், போப் பிரான்சிஸும் இந்த கொடூர தாக்குதலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Pope Francis
இதனிடையே அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபரும் இதில் உயிரிழந்ததாக அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்த 16 பேரையும் மீட்டு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
credit ns7.tv