நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, நாட்டின் பல்வேறு நகரங்களில், அரசியல் கட்சிகளின் பேனர்கள், போஸ்டர்கள் அகற்றப்பட்டன.
நாடாளுமன்ற தேர்தல் அட்டவணையை, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில்அரோரா வெளியிட்ட உடனேயே, நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. நடத்தை விதி அமலுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள், அரசியல் கட்சிகளின் பேனர்கள், போஸ்டர்கள், பிரதமர், முதல்வர்கள் புகைப்படத்துடன், அரசு திட்டங்களை விளம்பரப்படுத்தி வைக்கப்படும் பேனர்கள், அகற்றப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்திலேயே, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயக்ராஜ், மொரதாபாத் மத்திய பிரதேச தலைநகர் போபால், உள்ளிட்ட நகரங்களில் அரசியல் கட்சியினர் வைத்திருந்த பேனர்கள் - போஸ்டர்கள் அகற்றப்பட்டன.
தமிழகத்திலும் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதை, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார், மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கரன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் புகைப்படங்கள், முதல்வர் புகைப்படமும் அகற்றப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம், 30 பறக்கும் படை குழுக்கள், தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்
source: ns7.tv