பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலை கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய கோரி மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
இதே போல், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பங்கேற்றனர். போரட்டத்தின் போது பொள்ளாச்சி குற்றவாளிகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி குற்றவாளிகளை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுபட்ட மாணவர்கள் பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க முழக்கங்களை எழுப்பினர்
பொள்ளாச்சியில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டித்து புதுக்கோட்டை அரசு பெண்கள் கலைக்கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். புதுக்கோட்டை அரசு பெண்கள் கலைக்கல்லூரி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்த கண்டித்து கல்லூரி வளக்கத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
credit ns7.tv