ஞாயிறு, 31 மார்ச், 2019

கிராமப் புற மக்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவதை ஊக்குவிக்க அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை!" - உயர்நீதிமன்றம் March 31, 2019

ns7.tv
Image
நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், கிராமப் புற மக்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவதை ஊக்குவிக்க அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 
அரசு மருத்துவர்கள், மருத்துவ மேற்படிப்பில் சேர சலுகை மதிப்பெண்கள் வழங்குவதற்காக, அவர்கள் பணியாற்றிய பகுதிகளை தொலைதூர பகுதி, எளிதில் அணுக முடியாத பகுதி, கிராமப் பகுதி என வகைப்படுத்தி தமிழக அரசு, மார்ச் 6ம் தேதி அரசாணை பிறப்பித்தது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த  நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என குறிப்பிட்டார்.  
பணியிடங்கள் தொடர்பான அரசின் வரையறையை மாற்றியமைக்க கோரி, ஓய்வு பெற்ற நீதிபதி குழு முன்பாக, மே 31ம் தேதிக்குள்  சம்பந்தப்பட்டவர்கள் மனு அளிக்கலாம் எனவும், அந்த மனுக்களை ஆய்வு செய்து, பகுதி வரையறை மாற்றம் தொடர்பாக ஜூலை 31ம் தேதிக்குள் குழு தன் முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
கிராமப் புறங்களில் மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக ஆரம்ப சுகாதார மையங்களை துவங்கிய போதும், அவற்றில் போதுமான மருத்துவர்கள் இல்லை எனவும்,  நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், கிராமப் புற மக்களுக்கு சிகிச்சை வழங்க மருத்துவர்கள் விரும்புவதில்லை குறித்து வேதனை தெரிவித்த அவர்,  மருத்தவர்களை ஊக்குவிக்க அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என, நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.