பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படம் பிடித்து மிரட்டப்பட்ட சம்பவம் செய்தியாக வெளிவந்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இச்செய்தி கேட்டு பெண்கள் மட்டுமல்ல, ஆண்கள், இளைஞர்கள் என பலரும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதை சமூகவலைதளங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
ஒருவேளை நமது வீட்டு பிள்ளைகள் இச்சம்பவத்தாலோ, அல்லது இதுபோன்றதொரு சம்பவத்திலோ பாதிக்கப்பட்டிருந்தால் நாம் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும்? நமது பிள்ளைகளை எவ்வாறு கையாண்டு இப்பிரச்னையில் இருந்து வெளிவர உதவுவதுடன், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைப் பெற்றுத்தர உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது போன்றவற்றில் பெரும்பான்மையானோருக்கு விழிப்புணர்வு இருப்பதில்லை.
பாதிக்கப்பட்ட பெண்ணையே மேலும் உளவியல் சிக்கலுக்கும், சித்ரவதைக்கும் உள்ளாக்கும் மோசமான போக்கே பெரும்பான்மையாக கேள்விப்படக் கூடியதாக உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் இச்சம்பவத்தில் இருந்து மீண்டுவர பெற்றோராக நாம் எப்படி இதை கையாள வேண்டும் என்பதை இளம்பெண் ஒருவர் முகநூலில் எழுதியுள்ள பதிவொன்று அழகாக எடுத்துக் கூறுகிறது.
கோவையைச் சேர்ந்த நர்மதா மூர்த்தி எனும் இளம்பெண் ஃபேஸ்புக்கில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பதிவு, அதன் முக்கியத்துவம் கருதி சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இப்பதிவு இடப்பட்ட 16 மணி நேரங்களுக்குள்ளாகவே ஃபேஸ்புக்கில் 1,000-க்கும் மேற்பட்ட நபர்களால் பகிரப்பட்டுள்ளது.
இளம்பெண்களுக்கு எதிரான பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பயங்கரம் தொடர்பான செய்தி வெளியான நிலையில், தனது தாயார் தொலைபேசி வாயிலாக தன்னிடம் பேசியதை நர்மதா மூர்த்தி, உரையாடல் வடிவில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
“இந்த மோசமான நிகழ்வு தொடர்பான செய்தி வெளியானபோது, பாரம்பரியமான ‘கோயம்புத்தூர் குடும்பத்தைச்’ சேர்ந்த பெண்ணான எனக்கு என் குடும்பத்தாரிடம் இருந்து, “ஆண் நண்பர்களுடன் வெளியே செல்லாதே, அது பாதுகாப்பானது அல்ல” என்பது போன்ற வழக்கமான அறிவுரைகள் அடங்கிய போன் கால்கள் மட்டுமே வரும் என்று எதிர்பார்த்திருந்தேன்.
ஆனால், என் எண்ணத்திற்கு மாறாக என்னிடம் பேசிய என் அம்மா இப்படி கூறினார் ! :
“நீ வெளியில் தங்கி இருக்கிறாய். உன்னை ஒரு வலிமையான, உறுதியான பெண்ணாக வளர்த்துள்ளதாகவே நம்புகிறேன்! எந்த நிலையிலும், உன் தந்தையும், நானும் உனக்கு பக்கபலமாய் இருப்போம்! யாரேனும் உனது படங்களையோ, வீடியோவையோ வைத்து மிரட்டல் விடுத்தால், எதற்கும் கவலைப்படாமல் ‘உன்னால் முடிந்ததை செய்துகொள்’ என கூறிவிடு. ஏனெனில், இந்த உலகத்திலுள்ள எல்லா பெண்களுக்கும் இருப்பதுபோன்ற வெறும் உடல்தான் இது. இதற்காக வெட்கப்பட ஏதுமில்லை!
ஒருவேளை இதுபோன்ற ஏதேனும் பிரச்னையை வருமெனில் அதை எதிர்கொள்ள ஒரு பெற்றோராக நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம்!
உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!”
என் அம்மா என்னிடம் இப்படி பேசிய போது, எனக்கு அவரை கட்டிக் கொண்டு அழவேண்டும் போல இருந்தது! இத்தகைய நம்பிக்கையும், பாதுகாப்புமே ஒரு குடும்பம் உங்களுக்கு கொடுக்க வேண்டிய விலைமதிப்பில்லாத ஒன்று.
எதுவாய் இருந்தாலும் பரவாயில்லை தைரியமான பெண்ணாக இருங்கள். பெற்றோர்களே உங்களுடைய குழந்தைகளுக்கு உறுதுணையாக இருங்கள். உங்களின் ஆதரவைவிட அவர்களுக்கு வேறெதும் வலிமையாக இருந்துவிட முடியாது.”
இவ்வாறு நர்மதா மூர்த்தி தனது ஃபேஸ்புக் பதிவினை நிறைவு செய்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பயங்கரம் தொடர்பான செய்திகள் பூதாகரமாகியுள்ள சூழலில், பெற்றோராக, அண்ணனாக, தம்பியாக, நண்பனாக நாம் செய்ய வேண்டியது பாதிக்கப்பட்டவர்களுக்கு தோளோடு தோள் நிற்பதுதான் என்பது நர்மதா மூர்த்தி போன்ற இளம்பெண்களின் பதிவுகள் வாயிலாவது இச்சமூகம் உணரட்டும்.
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu-important-editors-pick/12/3/2019/viral-post-coimbatore-girl-regard-pollachi