credit ns7.tv
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் விடிய விடிய வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து வருமான வரித்துறையினர் நடத்திய இந்த சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள அவரது வீட்டில் நள்ளிரவில் அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வந்தனர். அப்போது வருமான வரித்துறை அதிகாரிகளுடன் தி.மு.க-வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சுமார் 4 மணிநேரம் வரை அதிகாரிகள் சோதனை நடத்த முடியாமல் காத்திருந்தனர். அதன்பின்னர் அதிகாலை 3 மணியளவில் சோதனையை தொடங்கினர். வருமான வரி துறையினருடன், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தினர். சுமார் ஐந்தரை மணி நேரம் இந்த சோதனை காலை எட்டரை மணி அளவில் நிறைவடைந்தது. துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வாணியம்பாடியை அடுத்த செக்குமேடு பகுதியில் உள்ள திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜ், குடியாத்தம் அருகே உள்ள திமுக முன்னாள் ஒன்றியகுழு உறுப்பினர் சக்கரவர்த்தி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
வருமான வரித்துறை சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், தேர்தல் நேரத்தில் இந்த சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார். தன்னுடைய மகன் கதிர் ஆனந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதால் அதனை தடுத்து நிறுத்தி மன உளைச்சலை தர முயல்வதாகவும் குற்றம்சாட்டினார். களத்திலே தங்களை எதிர்க்க முடியாத மத்திய மாநில அரசுகளின் சூழ்ச்சி இது என குறை கூறிய துரைமுருகன், நேருக்கு நேர் எதிர்க்க முடியாமல் வருமான வரித்துறை அதிகாரிகளை ஏவி முதுகில் குத்துவதாக மத்திய பாஜக அரசு மீது குற்றஞ்சாட்டினார். இதுபோன்ற பூச்சாண்டி வேலைகளுக்கெல்லாம் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என துரைமுருகன் தெரிவித்தார்.