Credit : Ns7.tv
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்திற்கான உளவியல் காரணங்கள்.
பாலியல் வன்முறையைவிட ஆபத்தானது, பெண்களுக்கு எதிராக நம் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் கருத்தியல் வன்முறை. “பொள்ளாச்சியில் சுமார் 7 ஆண்டுகளாக பெண்களை காதலிப்பது போல் நடித்து, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை படம்பிடித்து மிரட்டி பல கோடி ரூபாய் பணம் சம்பாதித்துள்ளது அந்த கொடூர கும்பல். 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், 7 ஆண்டுகளாக யாரும் புகார் அளிக்க முன்வராதது ஏன் என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய கட்டாயம் எழுகிறது.”
இந்த கேள்விக்கு பதிலாக தான் பெண்களுக்கு எதிராக நம் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் கருத்தியல் வன்முறையை சாடியிருக்கிறார் நடிகர் சூர்யா. பெண் என்பவள் எப்படி ஆடை அணிய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்பதில் தொடங்கி, அவளது அன்றாட நடவடிக்கைகளை கூட கற்றுத்தரும், சமூகம் ஆண்களுக்கு கற்றுத்தருவதில்லை. பெண்ணின் உடல் என்பது புனிதமாக்கப்பட்டதன் விளைவு தான் 7 ஆண்டுகளாக ஒரு கொடூரம் தொடர அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
யார் உன்னை மிரட்டுகிறானோ, அவனைப் பொதுவெளியில் நிறுத்தி அசிங்கப்படுத்து. சிறைக்கு அனுப்பு. நாங்கள் உன்னோடு இருக்கிறோம்’ என்று குடும்பம் சொன்னால், இந்த மிரட்டல் ஒருபோதும் பலிக்காது என்ற நடிகர் சூர்யாவின் வரிகள் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றன. காதல் சர்ச்சைகளில் பெண்கள் சிக்கி விட்டாலே அவர்களை உடனடியாக திருமணம் செய்து வைக்கும் இந்த சமூகத்தில் இது போன்றதொரு மாற்றத்தை ஏற்படுத்த மிகப்பெரிய தூரத்தை கடக்க வேண்டியது அவசியமாகிறது.
பாலியல் வன்கொடுமை விவகாரங்கள் அரங்கேறும் போதெல்லாம் பெண்களின் ஆடை குறித்தும், விருப்பத்துடன் தானே சென்றாள் என கமெண்ட் செய்யவும் ஒரு கூட்டம் தயாராகவே இருக்கிறது. பள்ளி குழந்தைகள், சிறுமிகளிடம் என்ன கவர்ச்சியை கண்டு விட்டார்கள் என எதிர்கேள்வி கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. இது போன்ற வாதங்கள் அனைத்தும், ஆண்மகன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்ற ஆதிக்க எண்ணத்தில் இருந்து உதிப்பவை என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பான செய்திகள் வெளியானதும் உடல்சார்ந்த அச்சத்தை பெண்கள் கைவிட வேண்டும் என சமூக ஆர்வலர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் சமூக வலைதளத்தில் தங்களது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு கொண்டே இருந்தனர். உண்மையில் சமூகம் செல்ல வேண்டிய அடுத்தக்கட்டம் அதுவாக தான் இருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் அளிக்கும் நிலையை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. அப்படிப்பட்ட நிலை நமது காவல் நிலையங்களிலும், சமூகத்திலும் உள்ளதா என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்க முடியும். அப்படி ஒரு நிலையை உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாக மாற வேண்டும். பெண்ணின் உடலில் ஆபாசம் தேடுவதும், அதனை புனித பிம்பமாக கட்டமைக்க முயல்வதும் மாறும் வரை மிரட்டல்கள் மூலம் பெண்களை பணிய வைப்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.