Credit : Ns7.tv
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது என்பதற்காகவே, சம்பந்தப்பட்ட வீடியோ ஆதாரங்களை வெளியிட்டதாக பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் விளக்கமளித்துள்ளார்.
நியூஸ் 7 தமிழின் இன்றைய செய்தி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவதன் மூலம், நூற்றுக்கணக்கான இளம் பெண்களை பாதுகாக்க முடியும் என்ற எண்ணமும் ஒரு காரணம் எனவும் நக்கீரன் கோபால் குறிப்பிட்டார்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக கண்டனக் குரல் எழுப்புவதற்கு யாரும் தயங்க வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ள நக்கீரன் கோபால், நம் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு இதுபோன்ற சம்பவம் நேர்ந்திருந்தால், சும்மா இருந்திருப்போமா? என்றும் நக்கீரன் கோபால் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என்பது உண்மையானால், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பதறுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள நக்கீரன் கோபால், பார் நாகராஜனை அதிமுக நீக்கியது எதற்காக என்றும் கேட்டுள்ளார்.
மேலும், வீடியோவை வெளியிடக்கூடாது என்ற சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்கமுடியாது எனவும் வீடியோவை வெளியிட்டதால் தான் விவகாரம் வெளியே வந்துள்ளது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நக்கீரன் கோபால், பொள்ளாச்சி விவகாரத்தின் நியாயம் கிடைக்கும் வரை ஓய மாட்டேன் எனவும் குறிப்பிட்டார்