ஞாயிறு, 17 மார்ச், 2019

உலகையே உலுக்கிய நியூஸிலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்...பல நாடுகளில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்! March 17, 2019

Credit : Ns7.tv
Image
உலகையே உலுக்கிய நியூஸிலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும், இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் வெள்ளிக்கிழமை அன்று, இரண்டு மசூதிகளில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது, அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 49 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தை, தீவிரவாதிகள் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்தது, உலக நாடுகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 
இந்த தாக்குதலுக்கு அதிநவீன துப்பாக்கியை தீவிரவாதி பயன்படுத்திய நிலையில், மசூதியில் தொழுகைக்காக சென்றிருந்த வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், இந்தியர்கள் சிலரும் மாயமானதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இத்தாக்குதலுக்கு மூலக் காரணமாக கருதப்படும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த, 28 வயது இளைஞர் பிரெண்டன் ஹாரிசனை பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்துள்ள நிலையில், அவன் தனது தாக்குதலுக்கு முன்னதாக, நியூசிலாந்து பிரதமர், நாடாளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களுக்கு, தங்கள் கொள்கை, கோரிக்கைகள் குறித்த அறிக்கை ஒன்றை, மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ளது தெரியவந்துள்ளது. எனினும், அதில் குற்றவாளி என்ன தெரிவித்துள்ளான், என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இரட்டை கோபுர தாக்குதல் போன்று, நியூஸிலாந்தில் இரட்டை மசூதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று, பல்வேறு நாடுகளும் நியூஸிலாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், நியூஸிலாந்தில் இரட்டை மசூதி தாக்குதலை கண்டித்து, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். 
உலகில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் வலுவாக முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டாலும், அவ்வப்போது அப்பாவிகள் கொன்றழிக்கப்படுவது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.