வெள்ளி, 29 மார்ச், 2019

தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் 948 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு; 639 பேரின் மனு நிராகரிப்பு; சத்யபிரதா சாஹு பேட்டி

சென்னை: சுயேட்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்வார் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் இதனுடன் சேர்த்து நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது; தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் 948 பேரின் வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 639 பேரின் வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட 1587 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 9 பேர் வேட்பு மனுவை திரும்ப பெற்றனர். வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி ஏப். 10 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை ரூ 54.43 கோடி பறிமுதல் இதுவரை 261 கிலோ தங்கம் மற்றும் 346 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டததாக கூறினார். மேலும் 14 மடிக்கணினிகள், 279 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது தமிழகத்தில் 25.5 கோடி பணமும் ரூ.51. 83 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறினார். மேலும், 2,106 பறக்கும் படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

source ns7.tv