செவ்வாய், 19 மார்ச், 2019

கங்கா யாத்ரா பிரசாரத்தை தொடங்கிய ப்ரியங்கா காந்தி! March 18, 2019

Credit : Ns7.tv 
Image
உத்தரபிரதேசத்தில், கங்கா யாத்ரா என்னும் பிரசாரத்தை தொடங்கி உள்ளார் காங்கிரசின் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி. அவரது வித்தியாசமான பிரச்சாரம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ப்ரியங்கா காந்தி, வட மாநிலங்களில் காங்கிரசின் பிரம்மாஸ்திரமாக அக்கட்சி தொண்டர்களால் கொண்டாடப்படுபவர். இரண்டாம் இந்திரா காந்தி என காங்கிரஸ் தொண்டர்களால் அழைக்கப்படும் ப்ரியங்கா காந்தி, உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்குப்பகுதி  பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர், தனது சூறாவளி பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளார். இதன் ஒருபகுதியாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கங்கையாற்றின் வழியாக படகில் சென்று வாக்காளர்களை சந்திக்கும் கங்கா யாத்ரா பிரசாரத்தை பிரியங்கா காந்தி தொடங்கினார்.  படகு பயண பிரச்சாரத்திற்கு முன்னதாக பிரயாக்ராஜ் நகரில் உள்ள அனுமன் கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு நடத்தினார் ப்ரியங்கா காந்தி 
அதனை தொடர்ந்து, பிரயாக்ராஜ் நகரில் இருந்து கங்கையில் படகு பயணத்தை தொடங்கியுள்ள அவர், 3 நாட்களில் 140 கிலோமீட்டர் பயணித்து கரையோரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பிரயாக்ராஜின்  சத்நாக் பகுதியிலிருந்து தொடங்கியுள்ள கங்கா-யாத்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த பிரச்சார பயணம், கங்கை ஆற்றின் வழியாக வாரணாசியின் அஸிகாட் வரை நடைபெறுகிறது.
இந்த பிரச்சாரத்தின் போது இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய ப்ரியங்கா காந்தி, நாட்டின் காவலர் என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, பணக்காரர்களுக்கு மட்டுமே காவலாளியாக உள்ளதாக குற்றம் சாட்டினார். மக்களின் வலிகளை புரிந்து கொள்ளாமல் அவர்களுடன் கலந்துரையாடாமல் நல்லாட்சி என்பது சாத்தியமில்லை என குறிப்பிட்ட ப்ரியங்கா காந்தி, நாட்டில் மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் வலியோடு உள்ளதாக தெரிவித்தார். இதனை அடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் பிரியங்கா காந்திக்கு ஆளுயர மாலை அணிவித்தனர். அங்கிருந்த சிறுவர்களுடன் கலந்துரையாடிய ப்ரியங்கா காந்தி தனது மகிழ்ச்சியை பகிரிந்து கொண்டார். இதனை தொடர்ந்து மீண்டும் படகு மூலம் பயணத்தை தொடர்ந்த ப்ரியங்கா காந்தி, பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் படகிலேயே ஆலோசனை மேற்கொண்டார்
ப்ரியங்கா காந்தியின் இந்த வித்தியாசமான பிரச்சாரம், தேர்தலில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தாண்டி, அக்கட்சி தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் காங்கிரசின் வளர்ச்சி என்பது மிகவும் முக்கியமானது. அதனை ப்ரியங்கா காந்தி சாதிப்பார் என்றே நம்புகின்றனர் காங்கிரசார்.