credit ns7.tv
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இருந்து பிரியங்கா காந்தி தமது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் குஜராத்தின் அகமதாபாதில் நடைபெற்றது. ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அகமது படேல், குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோனி, புதிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேசிவரும் பொய்களையும், மாபெரும் தோல்விகளையும் மறைப்பதற்காகவும், திசைதிருப்பவும் மோடி, தேசப்பாதுகாப்பை தமக்கு ஏற்றார்போல் பயன்படுத்துவதாக இந்த கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காந்தி நகரில் உள்ள அடலஜ் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ப்ரியங்கா காந்தி, உரையாற்றினார். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பிரதமர் மோடி அரசு படுதோல்வி அடைந்துவிட்டதாக விமர்சித்த அவர், அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவில் இன்று நடப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். வாக்கே ஆயுதம் என குறிப்பிட்ட ப்ரியங்கா காந்தி, திரும்பும் இடமெல்லாம் வெறுப்பு விதைக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார்
இதனை தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, தற்போது நடக்கும் தேர்தல் கோட்சேவுக்கும், காந்திக்கும் இடையிலான போர் என்றும், வெறுப்பிற்கும் அன்பிற்கும் இடையிலான யுத்தம் என்றும் குறிப்பிட்டார். பாஜக வெறுப்பு அரசியலை கையாண்டு வருகிறது என்றும், தன்னாட்சி அமைப்புகளை பாஜக சீர்குலைக்கிறது என்றும் குற்றம்சாட்டினார். விவசாயி களிடம் இருந்து லாபம் வந்தாலும், அது 15 கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே செல்கிறது என குறிப்பிட்ட ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏழைகளின் பணம் பணக்காரர்களுக்கு தரப்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.