ors
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத் தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக, ஐ.நா சபையை அறிவிக்கக் கோரும் இந்தியாவின் கோரிக்கைக்கு சீனா முட்டுக் கட்டை போட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்ட ட்வீட் ஒன்று அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்திற்கு அடித்தளம் போட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிராக சீனா செயல்படும்போது, பிரதமர் மோடி வாயை திறக்கமாட்டார் எனவும், சீன அதிபர் ஷி ஜின்பிங்-ஐ பிரதமர் மோடி கட்டியணைத்து நட்பு பாராட்டுவார் என ராகுல் காந்தி கடுமையாக சாடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டார்.
ராகுல்காந்தியின் கருத்துக்கு பாஜக சார்பில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் தங்கள் பக்கங்களில் பகிர்ந்திருந்தனர்.. ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக இந்தியாவை சேர்க்கும் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஆதரவை வீணடித்த ராகுல்காந்தியின் தாத்தாவான ஜவஹர்லால் நேரு, அந்த வாய்ப்பு சீனாவுக்கு செல்வதற்கு வழிவகுத்ததாக குற்றம்சாட்டியுள்ளது அப்பதிவு.
இவ்விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளானது. ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியாவை அங்கமாக்கும் சர்வதேச சக்திகளின் ஆதரவை நேரு உண்மையிலேயே வீணடித்தாரா என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் ஆய்வு கட்டுரைகளை எழுதி, இவ்விவாதத்திற்கு நெருப்பூட்டினர். இவ்விவாதத்தில் பங்கெடுத்த The Hindu நாளிதழ், தனது பங்கிற்கு 1955 செப்டம்பர் 28-ம் தேதி தங்களது நாளிதழில் வெளியான செய்தியொன்றை தனது இணையதளத்தில் தற்போது மீண்டும் பகிர்ந்துள்ளது.

1955 செப்.27-ம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நேரு, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை உறுப்பினராக எவ்வித அதிகாரப்பூர்வமான அழைப்புகள் ஏதும் வரவில்லை என்று விளக்கம் அளித்ததை பகிர்ந்து இந்த சர்ச்சைக்கு மற்றொரு பரிணாமத்தை அளித்துள்ளது.
இந்நிலையில், கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட பிரபல ஆங்கில தினசரியான The Telegraph நாளிதழ், இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக கிண்டலடித்து, தனது பத்திரிகையின் முதல்பக்கத்தை வடிவமைத்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ‘Wanted...ஜவஹர்லால் நேரு அல்லது உண்மையான பாவம் செய்தவர்’ என்ற தலைப்பில் தனது முதல்பக்கத்தை வடிவமைத்திருந்தது.
ஜவஹர்லால் நேருவை குற்றவாளிபோல் முன்னிறுத்தி, முழுக்க முழுக்க பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்துள்ளது Telegraph. முதலில், ஜவஹர்லால் நேருவை, உண்மையான பாவம் செய்தவர் என குறிப்பிட்டு, ஜவஹர்லால் நேரு மறைந்த நாளான மே 27, 1964 அன்று அவரை கடைசியாக பார்த்ததாக குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து, ஜவஹர்லால் நேரு புரிந்த குற்றங்கள் என கிண்டல் செய்யும் வகையிலான பட்டியல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது டெலிகிராஃப்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பதிலாக, நவீன இந்தியாவின் கோவில்களைக் கட்டியது, 2 கோடி இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் கனவுக்கு முட்டுக்கட்டை போட்டது, பிரதமர் மோடியின் மான் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பேசாமல், ‘Tryst With Destiny’ என்ற நிகழ்ச்சியின் மூலம் சுதந்திர இந்தியாவில் தனது முதல் உரையை நிகழ்த்தியது என பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஜவஹர்லால் நேருவுக்கு எதிரான குற்றங்களாக டெலிகிராஃப் குறிப்பிட்டுள்ளது.
இதுபோன்ற பல குற்றங்களை புரிந்த ஜவஹர்லால் நேருவை யாரும் நெருங்காதீர்கள் எனவும், அவரது கைகளில், மிகப்பெரிய ஆயுதங்களான The Discovery of India மற்றும் Glimpses of World History ஆகிய இரு புத்தகங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், நேருவை யாராவது பார்த்தால், (Sherif) உயரதிகாரியான நரேந்திர மோடியிடம் தெரிவிக்குமாறும், அவர்களுக்கான பரிசாக பிரதமர் மோடி எழுதிய Exam Warriors புத்தகத்தின் ஒரு பிரதி வழங்கப்ப்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
டெலிகிராஃபின் இந்த பதிவிற்கு அரசியல் ஆர்வலர்கள் மத்தியில், ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியுள்ளது
source ns7.tv
http://www.ns7.tv/ta/tamil-news/india-important-editors-pick-newsslider/16/3/2019/telegraph-indirectly-criticized-pm