புதன், 20 மார்ச், 2019

70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை விமர்சிக்கும் பிரதமர் மோடி, 5 ஆண்டுகளில் செய்தது என்ன?!" - பிரியங்கா காந்தி March 20, 2019

credit : ns7.tv
Image
இந்தியாவில் 70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை விமர்சிக்கும் பிரதமர் மோடி, 5 ஆண்டுகளில் செய்தது என்ன என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச மாநில கிழக்குப் பிரிவு செயலாளராக உள்ள பிரியங்கா காந்தி, மக்களவைத் தேர்தலையொட்டி பிரக்யாராஜ் முதல் வாரணாசி வரை 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல இடங்களில் மக்களைச் சந்தித்துப் குறைகளை கேட்டறிந்து வருகிறார். முதல் நாள் கங்கை ஆற்றில் படகில் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்ட நிலையில், தொடர்ந்து 2வது நாளாக அங்குள்ள பிற பகுதிகளுக்கும் படகில் சென்றார். அப்போது சில கோயில்களுக்கு சென்றும் பிரியங்கா காந்தி வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, 70 ஆண்டுகளாக இருந்த காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் வளர்ச்சியில்லை என்ற பிதற்றலுக்கும் காலாவதி தேதி உள்ளது என மறைமுகமாக பிரதமர் மோடியை சாடினார். கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக, இதுவரை என்ன சாதித்துள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
பாஜக ஆட்சியில் விடும் அறிக்கைகள், விளம்பரங்கள் எல்லாம் கேட்பதற்கு நன்றாக இருப்பதாகவும், ஆனால் களத்தில் எந்த தடயத்தையும் காணவில்லை எனவும் விமர்சித்தார். விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாஜக ஆட்சியின் மீது விரக்தியில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், அனைவரும் இணைந்து இந்த அரசை மாற்றுவார்கள் என பிரியங்கா காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.