ஞாயிறு, 10 மார்ச், 2019

2019 மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு : அமலாகிறது தேர்தல் விதிகள்! March 10, 2019

source: ns7.tv

Image
2019 மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்ளை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளோடு விரிவான ஆலோசனை நடத்தி தேர்தலை சுமூகமாக நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்றும்,  வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வது பற்றியும் ஆலோசித்தாக தெரிவித்தார்.
மேலும், வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க வேண்டியது அவசியம் மற்றும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்த முறை மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். இதில் மொத்தம் 8.4 கோடி புதிய வாக்காளர்களும், 18 முதல் 19 வயதுக்குள் 1.5 கோடி வாக்காளர்களும் உள்ளனர்.

புகைப்படத்துடன் கூடிய வாக்குச் சாவடி சீட்டு தேர்தலுக்கு 5 நாள் முன்பே வழங்கப்படும். ஆனால் உரிய அடையாள அட்டை கொண்டே வாக்களிக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரம் அமைக்கப்படும்.
தேர்தல் விதிமீறல்கள் குறித்து ஆண்ட்ராய்டு ஆப்-மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் அடையாளம் பாதுகாக்கப்படும்; தேர்தல் நடவடிக்கைகள் செய்தியாக வெளியிடப்படும். தேர்தலை அமைதியாக நடத்த மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படையினர் அதிக அளவில் குவிக்கப்பட இருக்கின்றனர். அனைத்து கட்டத்திலும் தேர்தல் நடவடிக்கை பார்வையாளர்கள் இருப்பார்கள்.

வேட்பாளர்கள் படிவம் 26 தாக்கல் செய்யாவிட்டால் வேட்புமனு நிராகரிக்கப்படும். இலவச டோல்ப்ரீ எண் 1950 மூலம் புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சரிபார்க்கலாம். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கி வைக்கக்கூடாது.
7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், முதல் கட்டம் ஏப்ரல் 11ம் தேதியும், இரண்டாம் கட்டம் 18ம் தேதியும், மூன்றாம் கட்டம் ஏப்.23ம் தேதியும், நான்காம் கட்டம் ஏப் 29ம் தேதியும், ஐந்தாம் கட்டம் மே 6ம் தேதியும், ஆறாம் கட்டம் மே12ம் தேதியும் மற்றும் ஏழாம் கட்டம் மே 19ம் தேதியும் நடைபெறும்.
தமிழகம், புதுச்சேரியில் 2019 மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை மக்களவை தேர்தலோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19 தேதி தொடங்கும். தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26. வேட்புமனு பரிசீலனை மார்ச் 27,  மனுவை திரும்பப்பெற கடைசி நாள் மார்ச் 29. வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி எண்ணப்படும் என கூறியுள்ளார்.