தமிழகத்தில் காலியாக உள்ள நான்கு தொகுதிகளுக்கும் உடனே இடைத்தேர்தல் நடத்தக்கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹூவிடம் திமுக மனு அளித்தது.
சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் மனு அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, 45 நாட்கள் கால அவகாசம் இருப்பதால் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் காலியாக உள்ள நான்கு தொகுதிகளுக்கும் உடனே தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
இரண்டு தொகுதிகள் காலியானதும் குஜராத்தில் மட்டும் உடனடியாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், குஜராத்திற்கு ஒரு சட்டம், தமிழகத்திற்கு ஒரு சட்டமா? எனவும் கேள்வி எழுப்பினார். திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை சட்ட விரோதமானது எனவும், சோதனை நடத்திய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு அளித்துள்ளதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்
source ns7.tv