credit ns7.tv
சீனாவில் வானவில் போன்று பல வண்ணங்களில் காணப்பட்ட டைனோசர் இனமொன்று வாழ்ந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சீனாவில் வடகிழக்குப் பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவரால் 2014-இல் கண்டெடுக்கப்பட்ட பாறையொன்றில் காணப்பட்ட தொல்படிமம் ஒன்றை ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஆச்சர்யம் அளிக்கும் புதிய முடிவிற்கு வந்துள்ளனர். அதாவது, சுமார் 16.1 கோடி ஆண்டுகளுக்கு முன்பே பல வண்ணங்களால் ஆன இறகுகளைக் கொண்ட கழுத்துப் பகுதியினையுடைய டைனோசர்கள் வாழ்ந்துள்ளதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஒரு வாத்தின் அளவே இருக்கக் கூடிய இந்த டைனோசர்களின் கழுத்து இறகின் வண்ணங்களின் பொலிவினை பார்க்கும்போது, இவை எதிர்பாலினத்தை ஈர்க்கும் வகையில் பரிணாம வளர்ச்சிபெற்றிருக்க வேண்டும் என்ற முடிவிற்கும் விஞ்ஞானிகள் வந்துள்ளனர். டைனோசர்கள் இந்த வகையிலான பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது தற்போதுதான் கண்டறியப்பட்டுள்ளது.
தற்காலத்திய பறவையினங்களின் மூதாதையராக கருதப்படும் பறக்கும் டைனோசர்களின் ஒருவகையான இந்த டைனோசருக்கு, சியாங் ஜுஜி என சீன மொழியில் பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, வானவில் போன்று வண்ணமயமான கழுத்துடைய டைனோசர் என்பது இதன் பொருள். இந்த டைனோசருக்கு அறிவியல்பூர்வமான பெயர் சூட்டும் நடவடிக்கையிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த டைனோசரின் வால் பகுதி, தற்போதைய பறவைகளின் இறகால் ஆன வால் பகுதியைப் போன்றே உள்ளதுடன், சற்றே மாறுபட்ட அமைப்பினக் கொண்டுள்ளது. இதன்மூலம், இவ்வகை பறக்கும் டைனோசர்களின் பறக்கும் முறையிலலானது தற்போதைய பறவைகளின் பறக்கும் திறனிலிருந்து வேறுபட்டிருந்திருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கிட்டத்தட்ட முழுமையான புதைப்படிவம் கிடைத்துள்ளதால், இந்த வகை டைனோசர்கள் குறித்து மேலதிக தகவல்களை அறிவதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன