கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 25-ம் ஆம் தேதி காணாமல் போனநிலையில் அடுத்த நாள் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பத்து தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார், சிறுமியின் வீடு அருகே உள்ள தமது தாத்தா வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இவர் ஏற்கனவே சிறுமியை இருமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி இறந்த நிலையில் மீட்கப்பட்டபோது அவர் உடலில் மூடப்பட்டு கிடந்த டீ சர்ட்டும் சந்தோஷ் குமாருடையது தான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிறுமி காணாமல் போன இரவு சந்தோஷ்குமாரின் பாட்டியும் உயிரிழந்துள்ளார். சிறுமியின் உடலை பாட்டியின் வீட்டில் தான் சந்தோஷ்குமார் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாரின் வயது 34 என்பதும், மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதும் தெரியவந்துள்ளது.
source ns7.tv






