சென்னை உள்பட தமிழகத்தின் 24 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பேரிடர் மற்றும் வருவாய் துறை சார்பில் மார்ச் 7ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டில் சராசரி மழை அளவைவிட 14 விழுக்காடு குறைவாக மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில், அதிக மழைப்பொழிவை தரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில், 24 விழுக்காடு குறைவாக மழை பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால்,சென்னை, காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 17 மாவட்டங்களையும், கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள 24 வட்டாரங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.