source ns7.tv
நார்வே நாட்டில், நடுக்கடலில், என்ஜின் கோளாறால் பேரலையில் சிக்கி தள்ளாடிய சொகுசு கப்பிலில் இருந்து 1,300-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர். துரித கதியில் பயணிகளை மீட்ட, மீட்புக்குழுவுக்கு நார்வே பிரதமர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
நார்வே நாட்டின் ஹஸ்டர்ஸ்விகா பே பகுதியில் இருந்து, எம்.வி.வைகிங் ஸ்கை என்ற சொகுசுக் கப்பல், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரத்து 373 பேருடன் புறப்பட்டது. நடுக்கடலில் சென்றபோது, ராட்சத பேரலைகளால் கப்பலின் என்ஜின்கள் செயல்படாமல் நின்றுவிட்டன. இதனால் ராட்சத அலைகளில் சிக்கிய சொகுசு கப்பல், ஊஞ்சல் போன்று அங்கும் இங்கும் தள்ளாடியது. அசுர வேகத்தில் எழுந்த அலைகளால், கப்பலில் இருந்த பொருட்கள் அனைத்தும், அங்கும் இங்கும் சரிந்து சேதத்தை ஏற்படுத்தின. பயணிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டது.
நிலைமையை உணர்ந்த கப்பல் கேப்டன் மற்றும் மாலுமிகள், பயணிகள் அனைவருக்கும் உயிர்க்கவசங்களை உடனடியாக விநியோகித்தனர். சொகுசுக் கப்பல் கரையிலிருந்து, 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் தள்ளாடிய கப்பலில் இருந்து அபாய ஒலி எழுப்பப்பட்டது. தகவலறிந்த மீட்புக் கப்பல்கள் மற்றும் ஐந்து ஹெலிகாப்டர்கள், அங்கு பயணிகளை மீட்க விரைந்தன.
24 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் கப்பலில் இருந்த ஆயிரத்து 373 பேரும் பத்திரமாக மீட்கப்பபட்டனர்.கப்பலில் இருந்த பயணிகள் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு நார்வே துறைமுகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துரித கதியில் செயல்பட்டு, பயணிகளை பத்திரமாக மீட்ட மீட்புக்குழுவுக்கு, நார்வே பிரதமர் எர்னா சொல்பெர்க் நன்றி தெரிவித்துக்கொண்டார். இதனிடையே கப்பலில் உள்ள என்ஜின்களை சரிசெய்து, துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.