credit ns7.tv
தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை டீ அருந்தாமல் இங்கு பலருக்கு அன்றைய தினம் தொடங்குவதேயில்லை. ஆனால் சூடாக டீ அருந்துபவர்களுக்கு புற்றுநோய் தாக்குதல் பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.
புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டு வரும் தன்னார்வ சுகாதார அமைப்பான American Cancer Society மையத்தின் ஆராய்ச்சியாளர் ஃபர்ஹத் இஸ்லாமி தலைமையிலான குழுவினர் டீ, காபி போன்ற சூடான பானங்களை அருந்துவோர்களிடம் புற்றுநோய் பாதிப்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.
40 முதல் 75 வயதிற்கு இடைப்பட்ட பிரிவினர் சுமார் 50,000 பேருக்கு மேற்பட்டோரிடம் 2004 மற்றும் 2017 ஆண்டுகளுக்கு இடையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவினை தற்போது அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி 60 டிகிரி செல்சியஸ் (140 டிகிரி ஃபேரன்ஹீட்) அளவு சூடான வெப்பநிலையில், நாள் ஒன்றிற்கு 700 மில்லி லிட்டர் டீ அருந்துவோருக்கு (இரண்டு பெரிய கோப்பை தேனீர்) 90% அளவுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
உணவுக்குழாயில் ஏற்படும் புற்றுநோய் என்பது உலகின் 8வது மோசமான புற்றுநோயாகவும், உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகவும் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 4 லட்சம் பேர் இந்த நோயால் மரணமடைந்து வருவதாக சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் 13,750 ஆண்களிடமும், 3,900 பெண்களிடமும் புதிதாக உணவுக்குழாய் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படும் என அமெரிக்க புற்றுநோய் மையம் கணித்துள்ளது.
முன்னதாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் சூடாக டீ அருந்துவோருக்கு உணவுக்குழாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக தெரியவந்தது. இருப்பினும் அது தெளிவான முடிவுகளை பட்டியலிடவில்லை, தற்போது நடத்தப்பட்டிருக்கும் ஆராய்ச்சில் எந்த அளவு கொதிநிலையில் தேனீர் குடிப்பதனால் பாதிப்பு ஏற்படுகிறது என்பது தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.
டீயோ, காபியோ எந்த சூடான பானமாக இருந்தாலும், அதன் வெப்பநிலை குறையும் வரை பொறுத்திருந்து அருந்தினால் புற்றுநோய் பாதிப்பிலிருந்து தப்பலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.