இந்தியா-பிரேசில் இடையேயான உறவை மேம்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு, சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குடியரசு தின விழாவில் ஆண்டுதோறும் வெளிநாட்டு தலைவர் ஒருவர் பங்கேற்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் பொல்சனரோ பங்கேற்க உள்ளார். இதனையொட்டி தலைநகர் டெல்லி வந்த அவரை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். அதன்பின் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரேசில் அதிபருக்கு, பாரம்பரிய முறைப்படி படைவீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதன்பின் டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்ற பிரேசில் அதிபர் பொல்சனரோ, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடியை, பிரேசில் அதிபர் பொல்சனரோ சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகள் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேசினர்.
பின்னர், இருநாட்டு அமைச்சர்கள், அதிகாரிகளுடனான மட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இருநாடுகள் இடையே பாதுகாப்பு, சுகாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
credit ns7.tv