
71வது குடியரசு தினவிழாவையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
குடியரசு தினத்தையொட்டி பிரதமர் மோடி, டெல்லி போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உடனிருந்தார். பிரதமரை தொடர்ந்து முப்படைத் தளபதிகளும் போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து குடியரசு தினவிழா நடைபெறும் ராஜபாதைக்கு ராம்நாத் கோவிந்த், சிறப்பு விருந்தினரான பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ உள்ளிட்டோர் வந்தனர். குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் விழா நடைபெறும் இடத்தில் இருந்து குடியரசுத் தலைவரை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார். அப்போது 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். குடியரசு தின விழா அணிவகுப்பின் ஒரு பகுதியாக CRPF மகளிர் அணி சார்பில் பைக் சாகச நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்தியாவின் ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் பீரங்கிகள், ஆகாஷ் ஏவுகணை, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட Dhanush gun system, உள்ளிட்டவை அணிவகுப்பாக கொண்டு செல்லப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாநிலங்களின் கலாசாரத்தை பிரபலிக்கும் வகையில் வாகன ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெற்றது.
தமிழக அரசின் சார்பில் அய்யனார் சிலையுடன் சென்ற அணிவகுப்பு ஊர்தி சென்றது. அதேபோல் இந்திய விமானப் படையின் முக்கிய விமானங்களின் வான் அணிவகுப்பும் நடைபெற்றது. ஒவ்வொரு விமானப் படைப்பிரிவின் சார்பிலும், போர் விமானங்களின் சாகசம் நடைபெற்றது.
credit ns7.tv