நடிகர் ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன், சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளிவந்திருக்கிறது.பொய்யான தகவலைப் பரப்பியதற்காக நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியைப் பரப்பி பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் கழகத் தோழர்களும் பெரியாரியல் பற்றாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சின்ன விஷயங்களுக்கெல்லாம் வழக்கு போடும் தமிழக அரசு தங்களுடைய இயக்கத்தின் மூலவராக கருதப்படும் பெரியார் மீது செய்யப்பட்ட இழிவுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாம் சில நாட்கள் கவனித்துப் பார்த்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக அவரது திரைப்படம் திரையிடப்படும் அரங்குகளுக்கு முன்னால் மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
credit ns7.tv