குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 144 மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக ஏன் அனைவரும் மனு தாக்கல் செய்கின்றனர் என்ற காரணத்தை அறிய முடியவில்லை என தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்தார்.
மனுக்கள் அனைத்தையும் விசாரிக்காமல் ஒருதலைபட்சமான உத்தரவை பிறப்பிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார். தற்போது வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், NPR நடைமுறையை 3 மாதம் தள்ளி வைக்க வேண்டும் என மனுதாரரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
புதியதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 80 மனுக்களுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், இந்த வழக்குகள் அனைத்தையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.
credit ns7,tv