புதன், 29 ஜனவரி, 2020

பிரஷாந்த் கிஷோர் போனால் போகட்டும்” - நிதிஷ் குமார் அதிரடி

credit ns7.tv
Image
குடியுரிமை திருத்தசட்டத்திற்கு எதிரான கடுமையான நிலைபாட்டை எடுத்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவர் பிரஷாந்த் கிஷோர் கட்சியிலிருந்து விலகினாலும் பரவாயில்லை என்று அக்கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபலமான தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர், 2014ல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்ததில் இவரின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளுக்கு இவர் தேர்தல் உத்திகளை வகுத்து வழங்குவது அனைவரும் அறிந்ததே. 
தேர்தல் உத்தியாளராக விளங்கும் அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவராகவும் இருந்து வருகிறார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த போதிலும் சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், மக்கள் தொகை பதிவேடிற்கு எதிராகவும் பிரஷாந்த் கிஷோர் கடுமையாக பேசி வருவதுடன், டிவிட்டர் பக்கத்திலும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
இதன் காரணமாக முதல்வர் நிதிஷ் குமாருக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக முதல்வர் நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பிய போது, அவர் தேர்தல் உத்தியாளராக சில கட்சிகளுக்கு பணியாற்றி வருகிறார், அவர் இக்கட்சியில் நீடிக்க வேண்டுமென்றால் கட்சியின் அடிப்படை கட்டுமானங்களுக்கு இசைந்து செல்ல வேண்டும். அவர் கட்சியில் இருப்பதென்றால் இருக்கட்டும், விலகவேண்டுமென்றாலும் சரிதான்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் அவர் எப்படி இணைந்தார் என்று தெரியுமா? அமித்ஷா கேட்டுக்கொண்டதால் அவர் கட்சியில் சேர்க்கப்பட்டார்.” இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.
இதன் மூலம் பிரஷாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளத்தில் நீடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.