திங்கள், 20 ஜனவரி, 2020

“பிரதமர் இந்தியர் தானா?”- தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட நபர்!


பிரதமர் நரேந்திர மோடி, இந்திய குடிமகன் தானா என கேள்வி எழுப்பி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்துள்ளார் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் CAA மற்றும் NRCக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, குடியுரிமை திருத்த சட்டம், இந்தியர்களின் குடியுரிமையை பாதிக்காது எனவும் பொதுமக்களிடம் எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் எனவும் மத்திய அரசு சார்பில் தொடர்ந்து விளக்கமளிக்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், பிரதமர் மோடி இந்திய குடிமகனா என தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலம் கேள்வி எழுப்பியுள்ளார் கேரளாவின் திரிசூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோஷ் கல்லுவேட்டில். அவர் அளித்த மனுவில், பிரதமர் மோடி இந்திய குடிமகன் என்பதற்கான சான்றுகளையும் காண்பிக்கப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜோஷ் கல்லுவேட்டில் என்பவரின் மனு, சாலக்குடி பகுதி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டினை எதிர்த்து பலர் கருத்து தெரிவித்துவரும் நிலையில், கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதுபோன்று கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
குடியுரிமை திருத்த சட்டத்தை கேரளாவில் அமல்படுத்தமாட்டோம் என கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
credit ns7tv