செவ்வாய், 28 ஜனவரி, 2020

மத்திய அரசுடன் சமாதான உடன்படிக்கை மேற்கொண்ட போடோலாந்து..!

credit ns7.tv
Image
போடோலாந்து தனி நாடு கோரி போராடி வந்த தடை செய்யப்பட்ட அமைப்பான போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி, மத்திய அரசுடன் சமாதான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 
உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அசாம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் முன்னிலையில் இதற்கான உடன்படிக்கை இன்று கையெழுத்தானது. இதில், மத்திய அரசும், அசாம் மாநில அரசும், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியின் 9 பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் கையெழுத்திட்டனர். இந்த முத்தரப்பு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து பேசிய அமித் ஷா, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்படிக்கையின் காரணமாக அசாம் மற்றும் போடோ மக்களின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும் என குறிப்பிட்டார். 
BODO
மத்திய அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். மேலும், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 1550 பேர், அவர்களிடம் உள்ள 130 ஆயுதங்களுடன் வரும் 30ம் தேதி சரணடைவார்கள் எனவும் அமித் ஷா கூறினார். போடோலாந்து தனிநாடு கோரி கடந்த 27 ஆண்டுகளாக இந்த அமைப்பு போராடி வந்தது. இந்த அமைப்பின் போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இதுவரை 2823 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள உடன்படிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.