கர்நாடகா மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 2 லட்சம் பேர் பங்கெடுத்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக நூற்றுக்கணக்கானோர் படகில் பயணம் செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் ஒரு மாதத்தை கடந்தும் போராட்டங்கள் ஓயாமல் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் நடக்கும் இந்த போராட்டங்கள் அனைத்தும் மக்களை தவறான முறையில் வழிநடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது மத்திய அரசு. இந்த வரிசையில் கர்நாடக மாநிலம் மங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளும், சமூக செயற்பாட்டாளர்களுமான ஹர்ஸ் மேந்தர், கண்ணன் கோபிநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், 2,00,000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மங்களூருவில் நடந்த இந்த போராட்டத்திற்கு கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர். இதனால் பெரும்பாலான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனினும், போரட்டம் நடைபெற்ற பகுதிக்கு செல்ல முடிவெடுத்த பலர் படகுகளின் மூலம் நேத்ராவதி ஆற்றில் பயணித்தனர். உலால் பகுதியில் இருந்து போராட்டம் நடந்த அடையாறு ஷா மைதானத்திற்கு நூற்றுக்கணக்கானோர் படகில் சென்றனர். தேசியக்கொடியை ஏந்திப்பிடித்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.
மங்களூருவில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க பெரும் எண்ணிக்கையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இறுதியில் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் தேசிய கீதத்தை பாடி போராட்டத்தை நிறைவு செய்தனர்.
credit ns7.tv