சனி, 18 ஜனவரி, 2020

இவ்வளவு எளிதாக ஆசிட் வாங்க முடியுமா?" படக்குழு எடுத்த அதிரடி நடவடிக்கை!


நடிகை தீபிகா படுகோன் தயாரித்து நடித்த படம் சப்பக். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உண்மை வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 
வெறுமனே படத்தில் மட்டும் நடிக்காமல், நாட்டில் அதிகரித்து வரும் ஆசிட் வீச்சு சம்பவங்களின் பின்னணியை வெளிச்சமிட்டும் காட்டியுள்ளார் தீபிகா படுகோன். முறையான அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு ஆசிட் விற்பனை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இதனை பெரும்பாலான கடைக்காரர்கள் பின்பற்றுவதில்லை. 
photo
மும்பை நகருக்குள்ளேயே எவ்வளவு எளிதில் ஆசிட் வாங்க முடிகிறது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது தீபிகாவின் நண்பர்கள் குழு. ரகசிய கேமிரா மூலம் தமது நண்பர்கள் மாறு வேடமிட்டு கடைகளுக்குச் சென்று ஆசிட் வாங்குவதை குறும்படமாக வெளியிட்டுள்ளார் தீபிகா. பல கடைகளிலும் எளிதில் ஆசிட் வாங்க முடிந்துள்ளது. மிகவும் வீரியமிக்க ஆசிட் வேண்டும் என கேட்பவர்களிடம் ஆசிட்களின் தன்மையை கடைக்காரர்கள் எடுத்துக் கூறுகிறார்களே தவிர அடையாள அட்டையை கேட்பதில்லை.
அதில் ஒரே ஒரு கடைக்காரர் மட்டுமே அடையாள அட்டை காண்பித்தால்தான் ஆசிட் வாங்க முடியும் என கூறுகின்றார். வேறு யாரும் எவ்வித பாதுகாப்பு அல்லது சட்ட நடைமுறைகளை மதிக்கவே இல்லை. ஒரே நாளில் தீபிகாவின் நண்பர்கள் சட்டவிரோதமாக 24 ஆசிட் பாட்டில்களை வாங்கி வந்துள்ளனர். 
photo
இதுகுறித்து பேசும் தீபிகா, ஆசிட் விற்கப்படுவதால்தான் ஆசிட் வீச்சு நடக்கிறது. ஆசிட் வீச்சைத் தடுக்கவேண்டியது கடை உரிமையாளர்களின் கடமை மட்டுமல்ல. நாம் அனைவருமே சட்டவிரோதமாக ஆசிட் வாங்கப்படுவதை அறிந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
photo
இந்தியாவில் 1500 ஆசிட் வீச்சு சம்பவங்கள் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் அரங்கேறியுள்ளது. இதில் 99% காதலை ஏற்க மறுத்த பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன், திருமணம் செய்ய மறுத்த ஆணின் முகத்தில் ஒரு பெண் ஆசிட் வீசிய சம்பவமும் கடந்த அக்டோபர் மாதம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்தது. 
photo
ஆத்திரத்தில் செய்யும் இதுபோன்ற செயல்களால், பலரது முகம் மட்டும் அல்ல கனவுகளும் வாழ்க்கையுமே அழிந்துள்ளது. இதை உணர்ந்து ஆசிட் விற்பனை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது. 

credit ns7.tv