credit ns7.tv
விமானத்தில் பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு தொந்தரவு கொடுத்த நகைச்சுவை கலைஞர் குனால் கம்ராவுக்கு முன்னணி விமான நிறுவனங்கள் தடை விதித்துள்ளன.
மும்பையில் இருந்து லக்னோ சென்ற இண்டிகோ விமானத்தில் பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி, நகைச்சுவை கலைஞர் குனால் கம்ரா ஆகியோர் பயணம் செய்தனர். அப்போது, தமது செல்போனில் படம்பிடித்தபடி அர்னாப் கோஸ்வாமியை வம்புக்கு இழுத்த குனால் கம்ரா, அவரிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டார். அர்னாப் கோஸ்வாமி இதை கண்டுகொள்ளாமல் இருந்தபோதும், குனால் கம்ரா தொடர்ந்து அவரை தரக்குறைவாக விமர்சித்தார். இந்த வீடியோவை குனால் கம்ராவே சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் குனால் கம்ரா, தங்கள் விமானத்தில் பயணிக்க 6 மாதம் தடைவிதிப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்தது. இண்டிகோ-வை தொடர்ந்து ஏர் இந்தியா, Go Air, ஸ்பைஸ் ஜெட் போன்ற நிறுவனங்களும் அடுத்த அறிவிப்பு வரும் வரை குனால் கம்ராவை தங்களது விமானங்களில் அனுமதிக்க மாட்டோம் என தடை விதித்துள்ளன.
குனால் கம்ரா மீதான இந்தத் தடை ஒரு அநீதியான செயல் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.