ஞாயிறு, 19 ஜனவரி, 2020

கூட்டணி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க. ஸ்டாலின்..!

Image
திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் விவாதம் நடத்துவதை அனுமதிக்கக் கூடாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் இட பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக இருகட்சி நிர்வாகிகளும் தெரிவித்த கருத்துக்களால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது. திமுகவை சமரசப்படுத்தும் முயற்சியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கபாலு, கோபண்ணா உள்ளிட்டோரும் உடனிருந்தனர். 
KS alagiri
மு. க. ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, கே.எஸ்.அழகிரி, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை என்றும், கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பேசி தீர்த்துக் கொள்வோம் எனவும் கூறினார். விவாதம் என்பது கருத்து வேறுபாடு இல்லை என குறிப்பிட்ட அவர், விவாதிப்பது ஜனநாயக பண்பு எனவும் தெரிவித்தார்.
Durai
பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் சந்தித்து பேசியது பற்றி  ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைமுக தேர்தல் குறித்த அழகிரியின் வெளிப்படையான அறிக்கையே பிரச்சினைக்கு காரணம் என தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என ஏங்கித் தவிக்கும் குள்ளநரி சக்திகளுக்கும்,  சில ஊடகங்களுக்கும் மேலும் அசைபோடுவதற்கான  செயலாக அமைவதை தான் சிறிதும் விரும்பவில்லை எனக்கூறியுள்ளார். மேலும் விரும்பத்தகாத விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Karti
பொதுவெளியில் விவாதம் நடத்துவதை இனியும் அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ள ஸ்டாலின், கூட்டணி குறித்து இரு கட்சியினரும் பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், திமுகவின் செயல்பாட்டுக்கு காங்கிரஸ் தொடர்ந்து ஆதரவளிக்கும் என அழகிரி உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

credit ns7.tv