ஹைட்ரோ கார்பன், மதுக்கடை, 5 மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வு உள்ளிட்டவற்றிற்கு எதிராக கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நாடு முழுவதும் குடியரசு தினவிழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது, மக்களை மதரீதியாக பிளவு படுத்தக்கூடிய குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது, மாணவர்களின் கல்வியை பாதிக்கும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருங்காலக்குடி ஊராட்சிகுட்பட்ட குன்னங்குடிபட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சியில் செயல்படும் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என பெரும்பாலான பெண்கள் முன்வைத்த கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இடுகாடு பிரச்சனையில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற போலீசார் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மீண்டும் கிராம சபை கூட்டம் தொடர்ந்தது.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஊராட்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லாரன்ஸ்சிடம் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தினர். இதனை அவர் ஏற்க மறுத்ததால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 3 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர் அருகே பெரும்புகலூர், அடியக்கமங்கலம் ,வரம்பியம், கொத்தமங்கலம் ,கோட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
credit ns7.tv