ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதால் இளம் வயதிலேயே மாணவர்களுக்கு மன அழுத்தம் உருவாகுவதற்கு அரசே காரணமாக அமைந்துவிடும் என தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் அருகே உடன்குடியிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 30,00,000 மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிய பின்னர் மக்களவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் விரைவில் அமைய வேண்டும் என்று திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இரண்டு இடங்களுக்கும் மேல் ராக்கெட் ஏவுதளங்கள் இருப்பதாக கூறிய அவர், நம் நாட்டிலும் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் ராக்கெட் ஏவுதளத்தினை அமைத்து வளர்சியடைய வேண்டும் என்றார்.

மேலும் தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு உறுதிபடுத்தியிருப்பது வருந்தத்தக்கது என்றும் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் விமர்சித்தார். மேலும் பல்வேறு தரப்பினரும் இந்த தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் தமிழக அரசு மூர்க்கமாக கட்டாயமாக மாணவர்கள் மத்தியில் பொதுத்தேர்வை திணிப்பது என்பது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடியதாக அமைந்துவிடும் என்று கூறினார். மேலும் இளம் வயதிலேயே மாணவர்கள் மன அழுத்தம் உருவாகுவதற்கு அரசே காரணமாக அமைந்துவிடும் என்பதால் இது மாணவர்களின் எதிர்காலம் தொடர்பானதே தவிர ஈகோ தொடர்பானது அல்ல என்றும் குறிப்பிட்டார். மேலும் ஈகோ பார்க்காமல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
credit ns7.tv